மலையக பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை




 


(க.கிஷாந்தன்)

 

மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி பாடத்திட்டங்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படும். அதேபோல மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் ஜனவரி முதல் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 

தலவாக்கலை, வட்டகொடையில் அமைந்துள்ள பிரஜாசக்தி நிலையத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 13 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாக மலையக மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கூட்டுப்பண்ணை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான பயிற்சி நிலையம் அமைப்பதற்கான கட்டிட தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

 

இதன்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உள்ளிட்ட பிரஜாசக்தி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

 

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

" ஜனவரி மாதம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அறிவித்துள்ளனர். எனவே கிடைக்கும் என நம்புகின்றோம். தற்போதைய சூழ்நிலையால் தான் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது என்றாலும் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. ஆயிரம் ரூபாவைவிட அதிக சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அப்படியானால் இந்த கூட்டுஒப்பந்த முறையில் புதிய வகையில் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். குறித்த முறையில் குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். அது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

 

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் வெளியில் பேசுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு பேசுவது கம்பனிகளுக்கே சாதகமாக அமைகின்றன.

 

கொரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் நிச்சயம் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கியும் உள்ளோம்.

 

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வழங்கப்பட்டும் உள்ளன.

 

மலையகத்துக்கான இந்திய வீட்டுத்திட்டம் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நில ஒதுக்கீடு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனவரியில்தான் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும். அறைகுறையாக உள்ள வீடுகளை புனரமைப்பதற்கும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மலையக பல்கலைக்கத்துக்கான இடம் கொட்டகலை ரொசீட்டா பாம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய கல்லூரி ஒன்றும் அமைக்கப்படும். விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் பற்றி தீர்மானிக்கப்படும். எனது அப்பா கண்ட முக்கிய கனவொன்றை நிறைவேற்றியுள்ளேன்." - என்றார்.