அம்பாறை மாவட்டத்தில் அடை மழை




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கிழக்கு மாகாணத்தில் புரவி புயலை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் அடை மழை தற்போது பெய்து வருகின்றது.

குறிப்பாக நேற்று(6) இரவு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ,இறக்காமம் ,மல்வத்தை ,பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

 இந்நிலையினால் சம்மாந்துறை பகுதி வளத்தாப்பிட்டி வில்வம் குளத்தில் நீர் நிரம்பி வெளியேறியதுடன் குளத்தின் அருகில் சென்ற வாகனமும் தடம்புரண்டுள்ளது.குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் வலை மற்றும் தூண்டில் மூலம் மீன்களை பிடித்து வருகின்றனர்.

இதே வேளை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை சம்மாந்துறை பகுதியினை இணைக்கும்  வழுக்கமடு பாலம் நீரில் மூழ்கி காணப்பட்டதுடன் வயல் நிலங்களும் நீரில் மூழ்கின.

அத்துடன் நாவிதன்வெளி பகுதியில் உள்ள வயல் நிலங்களில் சில சட்டவிரோதமாக தனியாரினால் நீர்பாசன கால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளமையினால் நீர் வடிந்தோட முடியாத நிலைமை தோன்றியுள்ளது.பாய்ந்தோடும் வெள்ள நீர் கிட்டங்கி பாலத்தின் ஊடாக வான்பாய்ந்து மிக வேகமாக செல்வதனால் மீனவர்கள் அவதானமாக செயற்பட்டு வருகின்றனர்.

குறித்த வெள்ள நீர் பாய்ந்தோடுவதனால் அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றது.பிடிக்கப்படும் மீன்களில் பனையான் ,செப்பலி ,கணையான் ,மீசைக்காரன் ,கெழுறு ,ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வெளை வெள்ள நீர் வடிந்து செல்வதற்காக சல்பீனியா தாவரங்களை அகற்றும் முயற்சியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்டுள்ளனர்.