பரிசோதனை கட்டத்தில் இருக்கும் சீனாவின் கொரோனா தடுப்பூசியை மதிப்பீடு செய்த முதல் நாடாகி இருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம்.
சீனாவின் கொரோனா தடுப்பூசி 86 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கிறது என ஐக்கிய அரபு அமீரகம் கூறுகிறது.
சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.
சினோஃபார்ம் எனப்படும் சீனாவின் தேசிய மருந்துக் குழு நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து, எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என பரிசோதனையில் தெரிவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் கூறிப்பிட்டார்.
இருப்பினும் சினோபார்ம் நிறுவனமோ அல்லது ஐக்கிய அரபு அமீரகமோ, 31,000 பேரிடம் நடத்திய கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை சோதனை குறித்த விரிவான தரவுகளை வெளியிடவில்லை.
இந்த தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கெடுத்தவர்களில், எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது? எத்தனை பேருக்கு மருந்து போலத் தோன்றும் வெற்றுத் திரவம் செலுத்தப்பட்டது என்பது போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. அதே போல பக்க விளைவுகளைப் பற்றியும் விவரங்கள் இல்லை.
சினோபார்மின் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களில், 99 சதவீதத்தினரின் உடலில் ஆன்டி பாடி எனப்படும் எதிர்ப்பான்கள் உருவாக்கப்பட்டு, கொரோனா வைரசுடன் போராடுவதாக, ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக, இந்த முதல் செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பின் யாரும் கடுமையாகவோ அல்லது மிதமாகவோ கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
சினோஃபார்மின் இந்த கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை குறித்த விரிவான தரவுகள் வெளியிடப்படாததை நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதோடு, இந்த அறிவிப்பு ஏன் சினோபார்ம் நிறுவனத்திடம் இருந்து வரவில்லை எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
சினோபார்ம் மருந்தின் சோதனையில் 125 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கெடுத்தார்கள் என ஐக்கிய அரபு அமீரகத்தின் செய்தி நிறுவனமான வேம் கூறியுள்ளது.
சினோபார்ம் கொரோனா தடுப்பு மருந்து சோதனை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இந்த மருந்துக்கு கடந்த செப்டம்பர் மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்களப் பணியாளர்களுக்கு, அவசர பயன்பாட்டுக்குச் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
துபாயின் ஆட்சியாளர் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு, கடந்த நவம்பர் 2020-ல் சினோபார்மின் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இந்த சினோபார்ம் கொரோனா தடுப்பு மருந்து, ஒரு அவசர திட்டத்தின் கீழ், சீனாவில் 10 லட்சம் பேருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்டத்தில் இருக்கும் சீனாவின் நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், சினோபார்மின் தயாரிப்பும் ஒன்று.
இதில் பெய்ஜிங்கில் அமைந்து இருக்கும் மருந்து நிறுவனமான சினோவேக் தயாரித்த கொரோனாவேக் தடுப்பு மருந்தும் ஒன்று. பெரிய தடுப்பூசி நடவடிக்கைக்காக கொரோனாவேக் மருந்து, இந்தோனீசியாவுக்கு சென்று சேர்ந்து இருக்கிறது.
ஃபைசர் & பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை, முதல் நாடாக, பிரிட்டன் தன் மக்களுக்கு வழங்கத் தொடங்கிய அடுத்த நாள் ஐக்கிய அரபு அமீரகம் சீனோஃபார்ம் மருந்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஃபைசர் (அமெரிக்க மருந்து நிறுவனம்) பயோஎன்டெக் (ஜெர்மனி நிறுவனம்) ஆகியவற்றின் தடுப்பூசி 95 சதவீதம் செயல்திறன் உடன் இருப்பதாக, கடந்த நவம்பரில் வெளியான சோதனை முடிவுகள் கூறின.
பைசர் கொரோனா தடுப்பு மருந்துக்கு, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளரான எஃப்.டி.ஏ கூட்டத்தின் போது அனுமதி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராஜெனீகா இணைந்து கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து மற்றும் மாடர்னாவின் தடுப்பு மருந்துக்கு, மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகங்கள் விரைவில் அனுமதி வழங்கலாம்.
மாடர்னா தடுப்பூசியின் செயல்திறன் 94.5 சதவீதமாக இருப்பதாகக் கூறுகிறது அந்நிறுவனம். ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் ஆஸ்ட்ராசெனீகா மருந்தின் செயல் திறன் 70 சதவீதமாக இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
ரஷ்யாவின் ஸ்புட்நிக் 5 தடுப்பு மருந்தின் தரவுகள், 92 சதவீதம் செயல்திறனோடு இருப்பதாகக் காட்டுகிறது. இந்த ரஷ்ய தடுப்பு மருந்தும், ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் 1,80,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். 598 பேர் இறந்துவிட்டார்கள் என அந்நாட்டின் அதிகாரிகளே கூறுகிறார்கள்.
கொரோனா தொற்று பரவுவதைக் குறைக்கும் நடவடிக்கைகள் வெற்றி அடைந்து இருப்பதால், அடுத்த இரண்டு வாரத்தில், அபுதாபியில், அனைத்து பொருளாதார, சுற்றுலா, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என அபுதாபி அறிவித்து இருக்கிறது.
Post a Comment
Post a Comment