புயல், தமிழ்நாடு நோக்கி நகர்கிறது




 


புரெவி' புயல் தென் தமிழக கடலோர பகுதியை இன்று நெருங்குகிறது என்றும், கன்னியாகுமரி-பாம்பன் இடையே இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவோ, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் ராமேஸ்வரம் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புரெவி புயல் காரணமாக தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தனுஷ்கோடி பகுதியில் கடல் அலையில் சிக்கி புதிதாக போடப்பட்ட சாலை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக தனுஷ்கோடி பகுதி மீனவர்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதுகாப்பாக நிறுத்தவேண்டும் என்பதற்காக வடக்கு கடற்கரையிலிருந்து பாம்பன் பாலம் வழியாக தெற்கு குந்துகால் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகளில் மூன்று, நேற்றிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கி உள்ளன. இதனால் மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால் ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்துள்ளன. தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழகத்துக்கு எச்சரிக்கை

வியாழக்கிழமை காலை 5.30 நிலவரப்படி, மன்னாருக்கு 40 கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 120 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 320 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருப்பதாகவும், புயல் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் (புயல் வீசும் வேகம் அல்ல - புயல் நகரும் வேகம்) இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா, மன்னார் கடலோரப்பகுதிகளில் இது அடுத்த மூன்று மணி நேரத்தில் வீசும் என்று 5.30 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை நண்பகல் வாக்கில் பாம்பனை மையம் கொண்டு 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், பிறகு மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து பாம்பன், தென் தமிழக கடலோரப் பகுதிகள், கன்னியாகுமரி பகுதிகளில் இன்று வியாழக்கிழமை இரவும், நாளை வெள்ளிக்கிழமை காலையும் புயல் காற்றாக, 70-80 கி.மீ. வேகத்தில் வீசும் எனறும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதன் தாக்கம் தெரியும் என்றும் படிப்படியாக இது கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.