அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் உட்பட தாதி ஒருவருக்கு கொவிட்




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் உட்பட  தாதியர் ஒருவரும் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்

குறித்த  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையினை சேர்ந்த நபரொருவருக்கும்  பொத்துவிலில் இருந்து சிகிச்சை பெற்ற நபரொருவரின் உறவினருக்கும் கொவிட் - 19 தொற்று ஏற்பட்டிருந்த நிலையில்  குறித்த நபர்களுடன் தொடர்புகொண்டிருந்த எமது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கு இன்று  (12) வியாழக்கிழமை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது  வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவருக்கும்  தாதியர் ஒருவருக்கும் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டனர். இதனையடுத்து கொவிட் - 19 இற்காக சிகிச்சை அளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில்  இவர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளைஇ எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த  நிலையில் கொவிட் - 19 தொற்றாளாராக இனங்காணப்பட்ட வரை  கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எமது வைத்தியசாலையில் கொவிட் - 19 தொற்றாளார்கள் இனங்காணப்பட்டதை அடுத்து புதிதாக நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை  வைத்தியசாலையின் தொழிநுட்ப குழுவின் கூட்டம் நாளை (11) வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளதுடன்  அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

மேற்படி விடயத்தினை  வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மானும் உறுதிப்படுத்தியுள்ளார்.