நான் பிரதிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபை பிரதேசம் மிகக் கூடுதலான சனத்தொகையைக் கொண்ட ஒரு நகரமாகும். சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்த சகல நடவடிக்கைகளையும் கடந்த அரசில் நான் உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த போது எடுத்து இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக இறுதிக்கட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபையை நகரசபையாக தரமுயர்த்தி வர்த்தமானி அறிவிப்பு செய்ய முடியாமல் போய்விட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மாகாண அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு தொடர்ந்தும் பேசிய அவர். தனது உரையில்,
உள்ளூராட்சி மாகாண சபைகளுக்கு பொறுப்பாக உள்ள அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்ற இந்த சபையில் சில விடயங்களை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று நினைக்கின்றேன். குறிப்பாக கடந்த அரசில் உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்தவன் என்ற ரீதியில் இந்த நாட்டில் 25 மாவட்டங்களில் நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியைப் பெற்று நிலையான நகர அபிவிருத்தி திட்டத்தை அமுல்ப்படுத்த உள்ளூராட்சி அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இது ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு நகரத்தினை தெரிவு செய்து இந்த நாட்டில் நகர அபிவிருத்தியை மேற்கொள்ளும் சிறந்த திட்டமாக இருந்தது.
உலக வங்கி நாட்டின் பிரதான 09 நகரங்களை அபிவிருத்தி செய்வது போன்று ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த திட்டத்தை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் இப்போது துரதிர்ஷ்டவசமாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்ட திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்து இருக்கின்றார் இந்த திட்டத்தை நிதி அமைச்சு மேற்கொண்டு செல்வதற்கு முடிவு எடுக்கவில்லை என்பதனால் இதனை இடை நிறுத்துகின்றோம் என அறிவித்து இருக்கின்றார்.
இந்த நாட்டின் அபிவிருத்திக்காக நிதி அமைச்சர்,ஜனாதிபதி ஆகியோருடன் இது விடயமாக பேசி நிலையான நகர அபிவிருத்தித் திட்டத்தினை நாடு பூராகவும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனவே உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் சம்மாந்துறை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இந்த சபையில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
Post a Comment
Post a Comment