வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 4ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் விவசாய நிலங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
யானைகளின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் வயல்வெளிகளுக்கான பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளதுடன் சில வயல் நிலங்களில் யானைகள் உட்புகுந்து நாசம் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆகவே நிபந்தனையின் அடிப்படையில் விவசாய நிலங்களுக்கு செல்ல குறைந்தளவானோருக்கேனும் அரசாங்கம் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதேநேரம் சில வியாபாரிகள் சந்தர்ப்பத்திற்கேற்றதுபோல் பொருட்களுக்கான விலையினை உயர்த்தியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 54ஆக உயர்வடைந்துள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில் 86ஆக அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 13பேர் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டதுடன் திருக்கோவில் பிரதேசத்திலும் மேலும் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில் மக்களை வெளியேற அனுமதித்தால் கொரோனாவின் பரவல் அதிகரிக்காலம் என சுகாதார துறையினர் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு செயற்பாடாத பட்சத்தில் பாரிய விளைவை நாம் சந்திக்க வேண்டிவரும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இறுக்கமான இச்சூழலில் பொறுப்புடன் நடந்து கொண்டால் நாமும் நம்மை சூழவுள்ளவர்களும் பாதுகாக்கப்படுவர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வர்த்தகர்களின் உதவியுடன் ஒழுங்குபடுத்தலுக்கமைய உரிய பிரதேசங்களுக்கு நடமாடும் விற்பனை சேவை மூலம் வழங்க ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment