கல்முனையில் சந்தைகள் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களையும் மூடுமாறு மேயர் பணிப்பு




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)




கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுச் சந்தைகள், டியூட்டரிகள், விளையாட்டு மைதானங்கள், விழா மண்டபங்கள், பொது நூலகங்கள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் உட்பட மக்கள் கூடுகின்ற அனைத்துப் பொது இடங்களையும் மறுஅறிவித்தல் வரை மூடுமாறு மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நேற்று வியாழக்கிழமை (26) பிற்பகல் பணிப்புரை விடுத்துள்ளார்.

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் உறுதி செய்யப்பட்டிருப்பதனால், இப்பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு, தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சரினால் 2020.03.25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2168/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாநகர முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் அவர் இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் கல்முனைப் மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் பொதுச் சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், பொது நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், விழா மண்டபங்கள், சிறுவர் பூங்காக்கள் உட்பட மக்கள் கூடுகின்ற அனைத்து இடங்களும் மறுஅறிவித்தல் வரை மூடப்பட வேண்டும்.

கடற்கரைப் பகுதிகள், கடைத்தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தேவையின்றி நடமாடுவது கண்டிப்பாக தடை செய்யப்படுவதுடன் இப்பகுதிகளில் ஒன்றுகூடுவது முற்றாக தடை செய்யப்படுகிறது.

அனைத்து சந்தைகளும் மூடப்பட்டு, நெரிசலற்ற விசாலமான இடங்களிலேயே சமூக இடைவெளி பேணப்பட்டு, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்து, மீன், மரக்கறி வகைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சுகாதாரத்துறையினரால் விடுக்கப்படுகின்ற அனைத்து அறிவுறுத்தல்களையும் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சுகாதார நடைமுறைகள் யாவும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மிகவும் இறுக்கமாக அமுல்படுத்தப்படும்.

சுகாதாரக் கட்டுப்பாடுகளை மீறுவோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர முதல்வர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.


Thanks & Best Regards,

FAROOK SIHAN(SSHASSAN)-Journalist-මාධ්‍යවේදී
B. F .A (Hons)Diploma-in-journalism(University ofJaffna)
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)