மாணவர்கள் இடைநடுவில் வீடுகளுக்கு





 (க.கிஷாந்தன்)

 

பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை, கொரோனா அச்சத்தால் அவர்களின் பெற்றோர் இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்துச்சென்ற சம்பவம் இன்று (24.11.2020) தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர் என கிடைத்த தகவலையடுத்தே பெற்றோர் இவ்வாறான நடவடிக்கையில் இறங்கினர்.

 

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத்தவிர நாட்டில் ஏனைய பகுதிகளில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நேற்று (23) திறக்கப்பட்டன. 2ஆவது நாளாக இன்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தன.

 

வழமைபோல் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

 

கொழும்பில் இருந்து பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருபவர்கள் சுகாதார அதிகாரிகளால் சுயதனிமைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் இன்று (24) பாடசாலைக்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய நிர்வாகத்தினரால் குறித்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர்.

 

எனினும், இது தொடர்பில் பெற்றோருக்கு வேறு விதத்தில் தகவல் சென்றுள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் இருக்கின்றனர் எனக் தகவல் சென்றுள்ளதால் பதற்றமடைந்த பெற்றோர், பாடசாலையை நோக்கி படையெடுத்துவந்தனர்.

 

தமது பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்புமாறு அதிபர், ஆசிரியர்களிடம் கோரினர். இதனால் ஆசிரியர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து இது தொடர்பில் வித்தியாலய அதிபர் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

 

" இது தொடர்பில் நான் நுவரெலியா கல்வி வலய பணிப்பாளருடன் கலந்துரையாடினேன். அவரின் ஆலோசனையின் பிரகாரம், மாணவர்களை அழைத்துச்செல்ல வந்த பெற்றொர்களிடம் கடிதம் வாங்கிக்கொண்டு மாணவர்கள் அனுப்பட்டனர்." என்று வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.