(க.கிஷாந்தன்)
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை (28.11.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் 18 வயதுடைய யுவதிகள் இருவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இருந்து கடந்த 16 ஆம் திகதியே இவர்கள் ஊருக்கு வந்துள்ளனர். கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 26 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொட்டகலை வூட்டன் தோட்டத்தில் 36 வயதுடைய ஆணொருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து வந்துள்ளார்.
அதேபோல கொழும்பு, கிரிபத்கொடை பகுதியில் இருந்து தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவிலுள்ள வீட்டுக்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பில் இருந்து எவராவது வந்திருந்தால், தகவல்களை மறைக்காமல் அதனை உரிய தரப்பினருக்கு வழங்குமாறு கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிராசாந்த், கொட்டகலை பிரதேச சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் ஆகியோர் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து வந்தர்களிடம் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் கூறினர்.
Post a Comment
Post a Comment