(க.கிஷாந்தன்)
நுவரெலியா - வலப்பனை, தியநெல்ல பகுதியில் தனிவீட்டுத் திட்டத்தில் வாழும் மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வெகுவிரைவில் ஏற்படுத்திக்கொடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்ததையடுத்து, அதற்கான ஆரம்பக்கட்ட பொறிமுறை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை, தியநெல்ல பகுதியில் கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தினூடாக 166 வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
எனினும், சுமார் இரண்டு வருடகாலமாக மேலாக குறித்த வீடுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. இதனால் குடியிருப்பாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இது தொடர்பில் தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் கவனத்துக்கு அண்மையில் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேற்று (4) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், வீட்டுத் திட்டத்தினை பார்வையிட்டதுடன், குறைகளையும் கேட்டறிந்தார்.
இதன்போது குறைப்பாடுகளை உடனடியாக நிவர்த்திசெய்து, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு முழுமையானதொரு வீட்டுத்திட்டத்தை கையளிக்குமாறு மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா பிரதேச சபை தலைவர் யோகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ராஜதுரை மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் ஆகியோர் அமைச்சரோடு சென்றிருந்தனர்.
Post a Comment
Post a Comment