இந்த ஆண்டின் கடைசி நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்) திங்கள்கிழமை நிகழ உள்ளது.
ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 5 ஆகிய தேதிகளுக்கு பிறகு நவம்பர் 30ஆம் தேதி நிகழவுள்ள நிலவு மறைப்பு 2020ஆம் ஆண்டில் நான்காவது மற்றும் கடைசி நிலவு மறைப்பாகும்.
இதற்கு முந்தைய மூன்று நிலவு மறைப்புகளையும் போல இதுவும் ஒரு புறநிழல் நிலவு மறைப்பாகவே இருக்கப்போகிறது.
சூரியன் - பூமி - நிலவு ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி இடையில் வந்து மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும்.
நாளை நிகழப்போகும் கிரகணம், முழுமையான சந்திர கிரகணம் அல்ல. அதாவது நிலவு பூமியால் முற்றிலும் மறைக்கப்படாது.
ஐரோப்பா, ஆஃப்ரிக்கா, ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் நிலவு ஒளி மங்கித் தெரிவதைத் திங்களன்று நிகழும் நிலவு மறைப்பின்போது காண முடியும்.
புறநிழல் சந்திர கிரகணம் என்றால் என்ன?
நவம்பர் 30ஆம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம், புறநிழல் சந்திர கிரகணம் (penumbral lunar eclipse) என்று அழைக்கப்படுகிறது.
பூமியின் உள்நிழல் ஆங்கிலத்தில் 'umbra' என்றும், புறநிழல் ஆங்கிலத்தில் 'penumbra' என்றும் அழைக்கப்படுகிறது.
புறநிழல் சந்திர கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.
சூரியன் - பூமி - நிலவு ஆகிய மூன்றும் நேர்கோட்டில் இருக்கும்போது, பூமியின் உள்நிழல் நிலவின்மீது விழுந்து அதை மறைக்கும். அதனால் நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்) தெளிவாகப் புலப்படும்.
பூமியின் உள்நிழல் நிலவின் மீது விழாமல், அதன் புறநிழல் நிலவின் மீது விழுவது புறநிழல் நிலவு மறைப்பு எனப்படும். இதை வேறு சொற்களில் கூறுவதானால், பூமியைச் சுற்றி வரும் நிலவு, பூமியின் புறநிழல் வழியாகக் கடந்து செல்லும்.
சந்திர கிரகணம் - இந்தியாவில் எப்போது, எப்படி தெரியும்?
"புறநிழல் சந்திர கிரகணத்தை நாங்கள் சந்திர கிரகணமாகவே கருதுவதில்லை. ஏனென்றால் இந்த நிகழ்வின்போது நிலவு பூமியின் உள்நிழலால் மறைக்கப்படுவதில்லை. பூமியின் புறநிழல்தான் நிலவின் மீது விழும். இந்த நேரத்தில் நிலவு சற்று ஒளி மங்கி தெரியுமே ஒழிய மறைக்கப்படாது," என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள்.
"நவம்பர் 30 அன்று சந்திர கிரகணம் இந்திய / இலங்கை நேரப்படி மதியம் 12.59 மணி முதல் மாலை 05.25 வரை நிகழும். சந்திர கிரகணத்தின் உச்சம் மதியம் 03.13 மணிக்கு நிகழும். ஆனால் இது நிகழும் பொழுது இந்தியாவில் பகல் நேரமாக இருப்பதால் இதை நம்மால் பார்க்க முடியாது."
"ஒருவேளை இரவில் நிகழ்ந்தாலும் கூட புறநிழல் சந்திர கிரகணத்தை நிலவின் ஒளி மங்கித் தெரிவதை வைத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நிலவின் இயல்பான வெளிச்சம் எப்பொழுது எந்த அளவுக்கு இருக்கும் என்று துல்லியமாக தெரிந்த வல்லுனர்களால் மட்டுமே நிலவின் ஒளியில் புறநிழல் சந்திர கிரகணம் நிகழும் பொழுது உண்டாகும் மாற்றத்தை அறிய முடியும்," என்று கூறுகிறார் சௌந்தரராஜ பெருமாள்.
கார்த்திகை தீபம், கார்த்திக் பூர்ணிமா
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இதே கருத்தைத்தான் தெரிவிக்கிறது.
"இந்த நிலவு மறைப்பை கருவிகளின் உதவியின்றி (வெறும் கண்ணால்) பார்க்க அதிக வாய்ப்பில்லை. ஆனால் நிலவை சுற்றி வரும் லூனார்ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) விண் சுற்றுக்கலத்திற்கு கிடைக்கும் சூரிய மின்னாற்றல் குறைவதைக் காண முடியும்," என நாசா தெரிவித்துள்ளது.
அதாவது சூரியனின் ஒளி நிலவின் மீது படாமல், பூமியின் புறநிழல் நிலவின் மீது விழும் சமயத்தில், சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் அந்த சுற்றுக்கலன் பெறும் சூரிய ஒளி, இந்த நிலவு மறைப்பு நிகழும் நேரத்தில் குறையும்.
இந்த நிலவும் வரைப்பின் உச்சத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 83 சதவிகித பரப்பு மீது பூமியின் நிழலில் ஒரு பகுதி விடும் என்று நாசா தெரிவித்துள்ளது.
கார்த்திகை தீபம், கார்த்திக் பூர்ணிமா, குளிர் நிலவு (Cold Moon), உறைபனி நிலவு (Frost Moon), குளிர்கால நிலவு (Winter Moon), பீவர் நிலவு (Beaver Moon), ஓக் நிலவு (Oak Moon), மூன் பிஃபோர் யூல் (Moon Before Yule), பிள்ளை நிலா (Child Moon), தசாங்தையிங் திருவிழா நிலவு (Tazaungdaing Festival Moon) என்று வெவ்வேறு பெயர்களில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் நவம்பர் 30 சந்திர கிரகணம் நிகழும் நாள் அழைக்கப்படும் என்கிறது நாசா.
மே 26, 2021 அன்று அடுத்த நிலவு மறைப்பு நிகழும். வரும் டிசம்பர் 14ஆம் தேதி கதிரவ மறைப்பு (சூரிய கிரகணம்) நிகழும்.
Post a Comment
Post a Comment