விருத்திமான் சஹா யார்?




 


டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


ஹைதராபாத் அணி நேற்று வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் டெல்லி அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19 ஓவர்களில் வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டது இந்த வெற்றிக்கு வழி வகுத்தது.


ஹைதராபாத் கேப்டன் வார்னர் நேற்றைய போட்டியில் 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.


அவரைவிட அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் ஆகியவையும் அடக்கம். இவர்தான் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வானார்.


இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் நடராஜன்: விளையாட வாய்ப்பு கிடைக்குமா?

RR Vs SRH: ஆர்ச்சர் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி: யார் இந்த விஜய் சங்கர்?

இவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை வழங்குகிறோம்.


விருத்திமான் சஹா 1984ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று மேற்குவங்க மாநிலம் சக்தி கார்க் நகரில் பிறந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் அவர் தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார்.


டெல்லி அணியின் பந்துகளை சிதறடித்த ஹைதராபாத்தின் விருத்திமான் சஹா

பட மூலாதாரம்,BCCI / IPL

2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய விருத்திமான் சஹா அதே ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.


சென்ற ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகளில் அவ்வப்போது விளையாடி வந்த விருத்திமான் சஹா இந்தியாவுக்காக இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.


ஆனால் 2014ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இலங்கைக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டி தான் அவர் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டி. இதுவரை அவர் வெறும் 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.


டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் ஐபிஎல் அவருக்கு பெயர் பெற்று கொடுத்தது. இதுவரை 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார் விருத்திமான் சஹா.


இந்திய அணிக்காக அண்டர்-19 மற்றும் அண்டர்-22 போட்டிகளில் விளையாடியுள்ள விருத்திமான் சஹா மேற்கு வங்க அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.


ஐபிஎல் என்று அறியப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார் விருத்திமான் சஹா. ஆனால் தொடர்ந்து மூன்று சீசன்களில் அவருக்கு பெரிதாக எதுவும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.


ipl

பட மூலாதாரம்,BCCI / IPL

2011ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. அப்போதும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல்தான் இருந்தார்.


2014 ஆம் ஆண்டு விருத்திமான் சஹாவை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து அவரை விக்கெட் கீப்பர் ஆகவும் பயன்படுத்தியது.


2014ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்காக ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார்.


ஆனால் அவரது சதம் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவவில்லை. அந்த போட்டியில் அவரது தொடக்ககால அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வென்றது.


2014ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் முதல் கவனம் பெற்று வரும் வீரராக இருக்கும் விருத்திமான் சஹா 2019ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.