இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கபில் தேவுக்கு (61) மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரத்த நாள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரி செய்ய அவருக்கு ஏஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கவனித்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப்பறந்த வீரர் கபில் தேவ், பல இன்றைய மற்றும் முன்னாள் கிரிக்கெட் சாதனையாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்கியவர்.
1983ஆம் ஆண்டில் நடந்த உலக கோப்பை போட்டியின்போது, மேற்கு இந்திய அணியை வீழ்த்தி, இந்தியாவுக்கு முதலாவது முறையாக உலக கோப்பை கிடைக்கச் செய்தவர் கபில் தேவ்.
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரி்க்கெட் பயிற்சியாளராகவும், பின்னர் வருணனையாளராகவும் கபில் தேவ் பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது கபில் தேவின் விமர்சனங்களும் பார்வையும் இந்திய தொலைக்காட்சி நேயர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
கபில்
பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்த நிலையில், மாரடைப்பால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி, அவரது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கிரிக்கெட் உலகில் கபில் தேவின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக சில விளையாட்டுகளை கருதலாம்.
1978ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி, பாகிஸ்தானின் க்வெட்டாவில் நடந்த ஆட்டத்தில் தமது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கிய கபில் தேவ், அதன் பிறகு இந்தியாவுக்கா 131 டெஸ்ட்களில் ஆடி 5,248 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி 434 விக்கெட்டுகளையும் பறித்த சாதனையாளராக கிரிக்கெட் உலகில் வலம் வந்தார்.
ஹரியாணாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஹரியாணாவின் சூறாவளி என ரசிகர்கள் அழைத்தனர். ஆல் ரவுண்டர் ஆக 225 ஒரு நாள் தொடரில் ஆடிய அவர், 3,783 ரன்களையும் 253 விக்கெட்டுகளையும் பறித்தார்.
1983ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய அவர் முதலாவதாக உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தந்த தருணம் இன்றளவும் கிரிக்கெட் உலகின் மைல்கல் சாதனையாக பேசப்படுகிறது.
போட்டித்தொடர்களில் 21 வயதில் 100 விக்கெட்டுகளை பறித்தவர் மற்றும் 1000 ரன்களை குவித்தவராக அறியப்பட்ட அவர், 1994ஆம் ஆண்டில் கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக 1999ஆம் ஆண்டில் அவர் பதவியேற்றார்.
1980ஆம் ஆண்டில் ரோமி பாட்டியாவை திருமணம் செய்து கொண்ட கபில் தேவுக்கு அமியா என்ற மகள் உள்ளார். இந்திய ராணுவத்தின் பிரதேச ராணுவப்படையில், கெளரவ லெப்டிணன்ட் கர்னல் பதவி கபில் தேவுக்கு 2008ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி வழங்கப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் "83" என்ற படம் பாலிவுட்டில் தயாராகி வருகிறது. அதில் கபில் தேவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார்.
Post a Comment
Post a Comment