#கௌபீனத்துடன் நுழைந்த தகநாயக்கா!




 


“காரில் ‘ வந்து இறங்கி நாடாளுமன்றத்தினுள் கௌபீனத்துடன் நுழைந்த  தகநாயக்கா!


பாடசாலைக்கு என சீருடைகள் உள்ளன. அவற்றை  அணிந்துதான் அப்பாடசாலைக்குப் போகமுடியும்.


அதுபோல பாரளுமன்றத்திற்கு எனவும் சீருடைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


அறுபதுகளில், டபிள்யூ டபிள்யூ தகநாயக்கா ( காலி  பிபிலத் தொகுதி உறுப்பினர்) வெறும் கௌபீனத்துடன்  

பாராளுமன்றத்திற்கு வந்தார்.


அவர் தமது இடையில் அதனைக் கட்டி அதனை ஒரு துணியால் மறைத்து அதாவது பொதுவெளியில் அப்படி வராமல்,  பாராளுமன்ற வாசலில் இறங்கும்போது அதனை அகற்றிவிட்டு, வெறும் கௌபீனத்துடன் சபைக்குள் நுழைந்தார்.


சபாநாயகர் அவரை  உள்ளே வராமல்  வெளியேறும்படி பணித்தார்.


அப்போது பதவியிலிருந்த ஶ்ரீமாவோ அரசாங்கம் ஒருவருக்கு இரண்டு யார் துணி என கூட்டுறவுக் கடைகள் மூலம் துணி வழங்கியதால் மக்களின் நிலையைக் காட்டவே அவர் அப்படி ‘ கோவணத்துடன்’ பாராளுமன்றம் வந்தார்.


சபாநாயகர் அவரை வெளியேறச் சொன்னதும் , நீங்கள் வழங்கும் இரண்டு யார் துணியில் இப்படித்தான் சீருடை அணிய முடியும் ‘ என்று சொல்லிவிட்டு, சபை ஊழியர்கள் வெளியேற்ற முன்னரே வெளியேறிவிட்டார்.


இப்படிப் பொது மக்கள் மத்தியிலும் பாராளுமன்றத்திலும் அவற்றுக்கான மரியாதையை வழங்கிய அரசியற் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் நடமாடியுள்ளனர். 


டாக்டர் விஜயானந்த தகநாயக்க, பணிஸ் மாமா எனப் புகழப்பட்ட அவர் ஒரு சாதாரண ஆசிரியராக இடது சாரி அரசியலுக்கூடாக மக்களவையில் நுழைந்தவர்.


அவருக்குரிய பல சிறப்பம்சங்கள் இன்றும் அரசியல் உலகில் பேசப்படுபவை.


காலி மாநகர சபை உறுப்பினராக, மாநகர முதல்வராக , கல்வி அமைச்சராக,  உள்நாட்டலுவல்கள் அமைச்சராக, இடைக்கால அரசின் பிரதமராக, கூட்டுறவுத்துறை அமைச்சராக தமது அரசியற் பயணத்தை மேற்கொண்டவர்.


அனைவருக்கும் சம கல்வி கிடைக்க கையெழுத்து வேட்டையில் முன்னின்று போராடியவர். 


காலி ரிச்மன்ற், கல்கிசை சென் தோமஸ் ஆகிய வசதி படைத்த பிள்ளைகளுக்கு வாய்ப்புக் கிடைக்கும் கல்லூரிகளிற் தாம்  பெற்ற கல்வி இலங்கையில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பியதாலேயே அவர் அப்படியான போராட்டத்தில் ஈடுபட்டார் எனப்பட்டது.


கல்வி அமைச்சராகவிருந்த காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ‘ பணிஸ்’ கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.


இதனால் இவர் அக்காலத்தில் ‘ பணிஸ் மாமா’என அழைக்கப் பட்டார்.


பிரதமர் பண்டாரநாயக்க கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.


பிரதமராக இருந்த காலத்தில் இலங்கை பூராவும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும் முறையைக் கொண்டுவந்தவர் இவரே.


தமது அமைச்சரவையை உடனடியாகக் குறைத்து ( 5 அல்லது 6 ஆக இருக்க வேண்டும்)  இலங்கையின் வரலாற்றில் குறைந்த அமைச்சரவை கொண்ட அரசாங்கத்தை அமைத்தவர் இவர்.

( இன்றைய ‘20அதிகாரங்களை இவர் அன்று வைத்திருந்திருந்தாரோ என்னவோ😀)

இவருக்கும் அமைச்சரவைக்குமிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துவிட்டார். 


பிரதமர் பண்டா கொல்லப்பட்டது 26செப்டெம்பர் 1959. இவர் பிரதமரகப் பதவி வகித்தது 26 .09. 59 முதல் 20.03.60 வரை. 


பிற்காலத்தில் ஜே ஆரின் அமைச்சரவையில் கூட்டுறவு அமைச்சராகவும் பதவி வகித்தார்.


இவருக்கு பல்கலைக் கழகம் ஒன்றே கலாநிதிப் பட்டத்தை கௌரவமாக வழங்கியது.


ஜீ ஜீ க்கு அடுத்தபடியாக 13 மணிநேரம், பாராளுமன்றத்தில் உரையாற்றியவர். 

குறிப்பாக அது இவரது கல்வி பற்றிய ‘பட்ஜட்’ உரை என்பர்.


ஜீ ஜீ 14 மணியும் அ தற்கு முன் சேர்  பி இராமநாதன் 8 மணிநேரமும் பேசியமை குறிக்கத்தக்கது.


பிரிட்டிசார் இவர்மீது தொடுத்த வழக்கொன்றில் சட்டசபை உறுப்பினராக இருந்தும் தமக்கென ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்யாமல் தாமே நீதிமன்றத்தில் போய் வாதிட்ட்டவர்.


மீண்டும் எனது பதிவின் முதல் வசனத்தை ஒரு முறை பார்க்கவும்.


மேயராக, கல்வி அமைச்சராக, பிரதமராக, கட்சித் தலைவராகப் பல பதவிகள் வகித்தபோதும் இ. போ.ச பஸ்ஸிலேயே பாராளுமன்றத்திற்கு வழமையாக வருகைதரும்தகநாயக்கா அன்று ‘ கௌபீனம்’அணிந்து காரில் வந்து இறங்கினார்.


இத்தகைய சிறப்புகள் கொண்ட ஒருவர்  நாடாளுமன்றத்திற்குள் எப்படி வந்தாற் தான் என்ன?