(க.கிஷாந்தன்)
தோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்கப்படவேண்டும்
என்பது உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட நானுஓயா,
உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் 21.09.2020 அன்று 10 ஆவது நாளாகவும் வேலைநிறுத்தப்போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என பதாதைகளை
தாங்கியவாறு கோஷமெழுப்பும் தொழிலாளர்கள், தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும்
அறிவித்துள்ளனர்.
கெலனிவெளி பிளான்டேசன் நிர்வாகத்துக்குட்பட்ட நானுஓயா
உடரதல்ல தோட்டத்தில் சுமார் 275 தோட்ட தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். எனினும்,
இவர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், சலுகைகளையும் தோட்டத்துரை (முகாமையாளர்) திட்டமிட்ட
அடிப்படையில் தடுத்து வருகிறார். ஓராண்டு காலமாக அவரின் அடக்குமுறை தொடர்வதாகவும்,
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கோரியுமே கடந்த 12 ஆம் திகதி முதல் போராட்டத்தில்
ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியதாவது,
" பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்காக
நியமிக்கப்பட்டிருந்த 'கங்காணி'மாருக்கு பெயர் போடப்பட்டு நாட் சம்பளம் வழங்கப்பட்டது.
இவ்வாறு நியமிக்கப்பட்டிருந்த இரு கங்காணிகளை தோட்டதுரை நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு
இருவரை நியமித்துள்ளார். இதனை ஏற்கமுடியாது. முன்னர் இருந்த நடைமுறை தொடரவேண்டும்.
8 மணிநேரம் வேலைசெய்தாலும் அரைநாள் பெயரே போடப்படுகின்றது.
கடும் மழையிலும் 18 கிலோ பறிக்குமாறு அழுத்தம். ஒரு கிலோ குறைந்தாலும் அரை நாள் பெயர்.
கொழுந்து அளவிடும் கருவியும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதனால் எமது உழைப்பு களவாடப்படுகின்றது.
அதாவது குறைந்த அளவீடு போடப்படுகின்றது. இவற்றையும் நாம் எதிர்க்கின்றோம்.
தேர்தல் தினத்தில் வாக்களிக்க சென்றிருந்தோம். அன்றைய
தினமும் அரை நாள் பெயரே போடப்பட்டுள்ளது. கேட்டால், அரசாங்கத்திடம் கேட்குமாறு துரை
எச்சரிக்கின்றார். எமக்கு அன்றைய நாளுக்கான முழு சம்பளம் வேண்டும். இவ்வாறு சட்டரீதியாக,
தொழில் ரீதியாக எமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
தோட்டதுரையின் செயற்பாடே இதற்கு காரணம். தொழிற்சாலையும்
மூடப்பட்டுள்ளது. இதனால் வெளி தோட்டத்துக்கே கொழுந்து அனுப்படுகின்றது. ஓய்வூதியம்
பெற்றவர்களை அழைத்து, கொழுந்து உள்ள மலைகளில் கொழுந்து கொய்து அவர்களுக்கு குறைந்த
ஊதியம் வழங்கப்படுகின்றது. தோட்டத்தில் வேலைசெய்யும் எம்மை, கொழுந்து இல்லாத மலைகளுக்கு
சென்று பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது." எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Post a Comment
Post a Comment