பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்




 


சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 25) காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உடல் எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் இருந்து அவசரஊர்தி வாகனம் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அவரது சொந்த ஊரான சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள பூர்விக வீட்டுக்கு சனிக்கிழமை அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளது.

முன்னதாக, எஸ்.பி.பி மறைவுத் தகவலை செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், "எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து. அவரது பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை எங்களுடைய அப்பா இருப்பார்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பகல் 1 மணியை கடந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு வைரஸ் தொற்று நீங்கிய பிறகு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நுரையீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளில் உள்ள தொற்று குணமடைய அவர் சிகிச்சை பெற்று வந்தார்.