எனது சகோதரன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்




 


பட மூலம் கட்டுரையாளர், Hefraz Hizbullah

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா எனது இளைய சகோதரன், தவறாகக் கைதுசெய்யப்பட்டு, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவனாகக் காண்பிக்கப்பட்டு, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், அவனுக்கு இந்த வாரம், ஆகஸ்ட் 25 அன்று, தனது 40 ஆவது பிறந்த நாள்.

ஹேஜாஸ் பற்றிய எனது முன்னைய ஞாபகங்கள், களுபோவிலையிலிருந்து மவுண்ட்லவேணியவிலிலுள்ள எங்களது வீட்டிலிருந்தானவையாகும். ஹேஜாஸ், எங்கள் மூன்று சகோதரங்களுள், இளையவன். வயதில் ஏறத்தாழ நெருங்கியவர்களாக, இருந்த நாங்கள் மூவரும், எங்களது வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதில் பல மணித்தியாலங்களைக் கழிப்போம். ஹேஜாஸ், ஒரு பிறந்த நாள் வாழ்த்தில், எங்களது மூத்த சகோதரியை, ஒரு மௌனமான வீரபுருஷியாகக் குறிப்பிட்டு, அவரை ஆதர்சித்து நோக்கினான். ஹேஜாஸ் மற்றும் நான், இரண்டு பையன்களாக, அநேகமான சில்மிஷங்களில் கூட்டுப்பங்காளிகளாக இருப்போம்.

எங்களது விளையாட்டுப் பொழுதுகள், ரொபின் ஹூட்டின் வாழ்க்கைக் கதையால் பெரிதும் கவரப்பட்டதாக இருக்கும். அதில் நாங்கள் அம்பும், வில்லுகளுடன் வீட்டைச் சுற்றி ஓடுவோம். சுவர்களில் ஏறி நான் தாவிக் குதிப்பேன், அநேகமான சமயங்களில் எனக்கொப்பாக தாவிக் குதிப்பதற்கு அவனால் இயலாத போதிலும், எனது சகா மற்றும் சிஷ்யனாக, ஹேஜாஸ் என்னைப் பின்தொடர்வான். ஆனாலும், அவன் முயற்சிப்பதிலிருந்து ஒரு போதும் நின்றுவிடவில்லை, பின்னர் வந்த பல வருடங்களிலும் அவன் அதனைத் தொடர்ந்தான். ரொபின் ஹூட்  வரலாறு, ஹேஜாஸின் அபிலாசைகளுக்கான களத்தை அமைத்தன என்பதுடன் தன்னைச் சுற்றியுள்ள சக மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கும் (அண்மையில் ஒரு பூனையைக் காப்பாற்றி வளர்த்தத்துடன் அவன் ஒரு பூனை விரும்பி என்பதும் உறுதிப்பட்டது) உதவும் ஓர் அதிக ஆர்வத்துடன் அவன் வளர்ந்தான்.  பாடசாலையில் நாங்கள் இருந்த ஒரு காலத்தில் நாங்கள் இருவருமே சுற்றாடல் பாதுகாப்பில் சம்பந்தப்பட்டிருந்தோம். ஆமை முட்டைகளை கொஸ்கொட கடற்கரையிலிருந்து சேகரித்து சென்.தோமஸ் கல்லூரியின் குஞ்சு பொரிப்பகத்திற்கு பாதுகாப்பாக அவற்றைக் கொண்டு வருவோம். அப்போது ஹேஜாஸிற்கு வயது பத்து அல்லது பதினொன்றே ஆகுமென்பதுடன், ஆமைக் குஞ்சுகளுக்காக மண் தரை நன்கு தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது, அவற்றுக்கு புது மீன்களை உணவூட்டுவது மற்றும் தண்ணீர் சரியான உப்புத்தன்மை மட்டத்தைக் கொண்டுள்ளது என்பவற்றை உறுதி செய்வதற்கு, வார இறுதி நாட்களில் சைக்கிளில் பாடசாலைக்குச் செல்வது என அவன் இந்தப் பொறுப்பை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டான்.

சுற்றாடல், அவனது பாடசாலை மற்றும் பொதுவாக வாழ்க்கை என்பவற்றின் மீதான அவனது ஆர்வமும் விருப்பும் தொடர்ந்து பிரகாசித்து வந்தது. எதிர்காலத்தில் தான் என்னவாக வரவேண்டுமென்பது அவனது பாடசாலை வாழ்க்கையின் மிக ஆரம்ப காலத்திலேயே அவனுக்குத் தெரிந்திருந்தது.  தனது சாதாரண தரப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்து விஞ்ஞானம் அல்லது கணிதத் துறைக்கு தெரிவாகும் தகைமை கொண்டிருந்த போதிலும், அவன் கலைத்துறையில் இணைந்து கொள்வதற்கு விரும்பினான். எங்களது தலைமை ஆசிரியர் வீட்டிற்கு வந்து அவனை வைது ஏனைய துறைகளிலொன்றில் இணைந்து கொள்வதற்கு அவனை சம்மதிக்க வைப்பதற்கு பெரிதும் முயற்சித்தார். தான் ஒரு சட்டத்தரணியாக வரவேண்டுமென்பதையும், அதனையே தான் மேற்கொள்ள வேண்டுமென்பது தெரிந்திருந்ததினால், ஹேஜாஸ் தனது தீர்மானத்தில் பிடிவாதமாக இருந்தான். இது தொடர்பாக அவன் தனது பின்னணி ஆராய்ச்சியை செய்திருப்பான் என நாங்கள் அனைவரும் அறிந்திருந்ததினால் எங்களது குடும்பத்தில் எவருமே அவனை இத்தீர்மானத்தில் அதைரியப்படுத்துவதற்கு முயற்சிக்கவில்லை. அவன் எப்பொழுதுமே தகவல்களை அறிந்துகொண்டு அதனடிப்படையிலேயே தனது தீர்மானங்களை மேற்கொள்வான். விவாதம் செய்தல் மற்றும் பொதுப் பேச்சு என்பவற்றில் திறமை கொண்டிருந்ததோடு அவையே தனது வலுவான திறன்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்; ஒரு சட்டத்தரணியாக அந்தத் திறமைகளை மேம்படுத்துவதன் மூலம் மக்களுக்கு உதவுவதில் ஒரு கூடுதலான தாக்கத்தை தன்னால் ஏற்படுத்துவததற்கு இயலுமாக இருக்குமென்பதையும் அவன் அறிந்திருந்தான். ஒரு சாரணனாக, இன்டரக்ட் கிளப்பின் (Interact Club) ஒரு துடிப்பான உறுப்பினராக (1997 இல் தலைவராக பொறுப்பேற்றான்) மற்றும் ஒரு மாணவர் தலைவராக, ஹேஜாஸ் எவருக்கேனும் உதவுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஒரு போதும் நிராகரித்ததில்லை. வோட்டர்போலோ விளையாட்டில் சிறந்த வீரனாக, ஓர் எண்ணற்ற சமூக நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளில் அவன் ஈடுபட்டிருந்தான். என்னைப் போலவே, அவனும் ஆரம்பநிலைப் பாடசாலையிலிருந்து பாடசாலையின் நீச்சல் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளான். 1994 இல், 14 வயதில், பாடசாலையின் வோட்டர் போலோ அணியில் இணைந்து கொண்டு பின்னதாக 2000 ஆண்டில் ஹொங்கொங் நகரில் மூன்றாவது ஆசிய பசுபிக் வோட்டர் போலோ சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினான். அதே வருடத்தில், ஹேஜாஸ் வோட்டர் போலோ விளையாட்டில் வர்ண விருதினைப் பெற்றது, எங்களுக்கு பெருமையான தருணமாக இருந்தது.

இவை அனைத்துமே அவன் வீட்டில் நேரத்தை அரிதாகவே கழித்தான் என அர்த்தப்படுத்துகிறது. அவன் சட்டக் கல்லூரியில் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் ஒரு நூறு தொலைபேசி அழைப்புகளை பெறுவான் – அவற்றில் பெரும்பான்மையானவை பெண்களிடமிருந்தானவை என்பதை என்னால் நினைவுபடுத்த முடிகிறது. அவன் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருந்தானென்பதுடன் வீட்டில் ஏனைய அனைவருமே அவனுக்கு வரும் அந்த அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் சலிப்படைந்து போய் விட்டோம்; ஏதேனும் அழைப்பு வந்தால் அவை அவனுக்கானவை என எங்களுக்குத் தெரியுமென்பதால் தொலைபேசி அழைப்பு வந்து அது தானே ஓய்ந்து விடுவதற்கு நாங்கள் விட்டுவிடுவோம்.

எவ்வாறாயினும், ஹேஜாஸ் தனியே தனது நோக்கங்கள் தனது வேலைகள் மீது மட்டும் கவனம் செலுத்துகின்ற ஒருவனல்ல. அவன் வேடிக்கைகளை விரும்பும், தன்னிச்சையான ஒருவன் என்பதுடன் அவன் சிறுவனாக இருக்கும் பொழுது இருந்தது போன்றே மற்றவர்களின் அன்பையும் கவனத்தையும் இன்னமும் விரும்புகின்ற ஒருவனாக இருந்தான். பாடசாலையில் கலாநிதி. அசங்க வெலிக்கல போன்றவர்களை அவன் பெரும் ஆதர்சனத்துடன் நோக்கினான். அவன் தனக்கென தனியான ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்தான். ‘அங்கிள் ஜோர்ஜ்’ என்று பட்டப்பெயரிட்டு, அவனை, அவனது மேலான கருத்தியல்கள் குறித்து குடும்பத்தில், நாங்கள் அவனைச் சீண்டுவோம் – அது அவனை அதிகம் எரிச்சலடைய வைக்கும். அதிக ஆடம்பரமான கருத்தியல்களுக்காக எங்களால் சீண்டப்பட்டாலும், கீழ்மட்டத்திலான மக்களுக்காக வேலை செய்வதற்கென வரும்பொழுது அவன் ஒருபோதும் அதற்காக பின்னின்றதில்லை – அது, அவன் ஓர் அரச சட்டத்தரணியாக முதலில் பணி செய்ய ஆரம்பித்த போது, பல வருடங்களாக அநுராதபுர நீதிமன்றத்தில் இழுபட்டுக் கொண்டிருந்த பின்தங்கிய விவசாயிகளுக்கான வழக்குகளைத் துரிதப்படுத்தியதிலிருந்து வணக்கத்திற்குரிய சோபித்த தேரரின் இறுதிச் சடங்கில் துக்கம் அனுஷ்டித்தவர்களுக்காக தண்ணீர் விநியோகித்தது வரையென, எல்லா விடயங்களிலும் அவன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். விஹாரமாதேவி பூங்காவில் நடைபெறும் விசேட புது வருட ஆராதனையில் எவ்வாறு எங்களது நண்பர்களுடன் கலந்து கொள்வோம் என்பனை நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த நிகழ்வில் எங்களுக்கு சிறப்பான அம்சம் என்னவெனில், அந்தக் காலைப் பொழுதில் பரிமாறப்படும் சுவையான காலை உணவாகும். இந்த ஆராதனை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின், ஒரு சில வாரங்களின் பின், மே 2019 இல், இலங்கையிலுள்ள அனைத்து நான்கு மதங்களின் குருமார்களின் பிரசன்னத்தோடு, தனது வகுப்புத் தோழர்களுக்காக ரமழான் திருநாளிற்கான ஒரு விசேட இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்வதன் மூலம் ஒற்றுமைக்கான செய்தியைத் தெரிவிப்பதற்கான, ஒரு யோசனையை அநேகம் ஹேஜாஸிற்குக் கொடுத்திருக்கலாம். ஹேஜாஸ், இன ஒற்றுமைக்காக சிந்திக்கும் இந்த வகையான ஒரு நபராவன். ஒரு பல்கலாச்சார சூழலுடன் ஒரு கத்தோலிக்கப் பாடசாலைக்குச் சென்றதில், அவன் எந்தவிதமான தீவிரவாதப் பக்கம் சாயாது, அனைத்து மத நம்பிக்கைகள் கொண்ட எல்லாவித நபர்களுடனும், அவன் நன்கு ஒருங்கிசைவாகப் பழகினான்.

ஹேஜாஸ் எந்தவித களங்கமுமற்ற ஒரு பின்னணியைக் கொண்ட ஒருவன். அவன் கடுமையாக உழைத்து, அவன் செய்யும் பணியில் சிறந்து விளங்கினான். அவனது சகாக்களுடன் உலகம் முழுவதிலுமாக நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியாவில் மூட் மன்றம் (Moot Court) மற்றும் வாடிக்கையாளர் வாதுரைத்தல் (Client Counselling) போட்டிகளில் தனது சட்டக் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல விருதுகளை வென்றுள்ளான். சட்டக் கல்லூரியில், ஹேஜாஸ் சிறந்த செயலாற்றுகையின் மேன்மைக்கான வோல்டர் லடுவஹெட்டி (Walter Laduwahetty) விருது, அது போன்றே ஜூரிப் போட்டி பேச்சிற்காக ஹெக்டர் ஜயவர்தன ஞாபகார்த்த தங்க பதக்கத்தையும் வென்றுள்ளான். தனது சட்டப் பட்டப் படிப்பை முடித்த பின் அவன் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டான். அத்தோடு அவன் சீவனிங் புலமைப் பரிசில் (Chevening Scholar) வென்ற ஒருவன் என்பதுடன் லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியில் சட்டத்தில் முதுமானிப் பட்டத்திற்கான படிப்பையும் மேற்கொண்டான். ஒரு பேச்சாளனாக நன்கொடைகளுக்காக பரப்புரை செய்வதிலும் மற்றும் குறைந்த வசதிகொண்டவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் தனது திறமைகளை உபயோகித்தான். அவனது நாட்டிற்காக அவனது வேட்கை அளவிட முடியாததுடன் நல்லிணக்க முயற்சிகள் நோக்கியதான பங்களித்தல்களிலும் ஒரு வகிபாக்தை மேற்கொண்டிருந்தான்.

ஹேஜாஸ் எப்பொழுதும் ஏதோ ஒரு விடயத்திற்கு திட்டங்களை சிந்தித்துக் கொண்டிருப்பான். வீட்டில் ரமழான் கொண்டாட்டங்களுக்கு, அனைவருக்கும் வேடிக்கை நிறைந்து மகிழ்சியானதாக இருப்பதை உறுதி செய்வதற்கு, அவன் எவ்வாறு திட்டமிடுவான் என்பது ஒரு சிறிய ஆனால் இதயத்தைத் தொடுகின்ற உதாரணமாகும். அவனும் அவனது மனைவியும், எனது ஒன்றரை வயதுக் குழந்தையிலிருந்து 19 வயதான மருமகள் வரை, குடும்பத்திலுள்ள பிள்ளைகள் ஒவ்வொருவருக்குமாக அழகாகப் பொதி செய்யப்பட்ட பரிசில்களை வாங்குவார்கள். பின் அவற்றை அவர்களுக்கு வழங்கும் போது அவன் அவர்களுடன் ஆடிப் பாடி மகிழ்வான். இவன் செய்யும் இந்த சிறிய விடயங்களே, விசேடமாக அவனது பிறந்த நாளில், எங்களை அவன் பற்றி மிகவும் தவிக்க வைக்கிறது. குதூகலம் மற்றும் சந்தோசத்திற்கான நாள் அது, ஆனால் இப்பொழுது எங்களது குடும்பம் நொருங்கிப் போயுள்ளது. எங்களது வயது முதிர்ந்த பெற்றோர்கள் கவலையால் நோயுற்றுள்ளதுடன் இக் காலத்தில் மிகவும் தளர்ந்து போயுள்ளார்கள்.

அவன் எவ்வாறு கைது செய்யப்பட்டான் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டு குற்றமிழைத்தவர்களில் ஒருவருக்கு உதவினான் என்று குற்றம் சாட்டப்பட்டு ஒரு தீவிரவாதியாகக் காண்பிக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்வது மோசமான மற்றும் முற்றிலும் அதிர்ச்சி தருகின்ற ஒன்றாகும். எனது மைத்துனி ஒரு சில வாரங்களில் குழந்தை பிரசவிக்க உள்ளதுடன் இச் சம்பவம் அவரது துன்பத்தை மேலும் அதிகரிப்பதாகவும் உள்ளது. ஹேஜாஸ் தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காக பல திட்டங்களைக் கொண்டிருந்தான். ஆனால், இப்பொழுது அவை எல்லாம் காற்றில் கலந்துவிட்டவையாக உள்ளது. நாங்கள் ஒவ்வொருவருமே நல்லது நடைபெறுவதற்கு பிரார்த்திக் கொண்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். அவனது குற்றமற்றத் தன்மையை நிரூபிப்பதற்கு எங்களால் எதுவும் செய்ய முடியாதிருப்பது எனக்கு மிகுந்த வலியைத் தருவதுடன், இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்க வைக்கிறது.