அமெரிக்கா தனது நாட்டிலுள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலுள்ள சீன தூதரகத்தை மூடுவதற்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா மீதான தங்களது இந்த நடவடிக்கை "தேவையான பதில்" என்று சீனா கருத்துத் தெரிவித்துள்ளது.அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா "திருடுவதால்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்திருந்தார்.பல்வேறு முக்கிய பிரச்சனைகளின் காரணமாக அமெரிக்கா - சீனா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.வர்த்தகம், கொரோனா வைரஸ் பரவல், ஹாங்காங் விவகாரம் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சனைகளில் சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு எண்ணற்ற குற்றச்சாட்டுகளையும் தடைகளையும் விதித்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சீன ஆதரவு ஹேக்கர்கள் கோவிட் 19 தடுப்பூசிகளை தயாரித்துவரும் ஆய்வகங்களை இலக்கு வைத்திருப்பதாக அமெரிக்காவின் நீதித்துறை குற்றம்சாட்டியது."அமெரிக்காவில் இருக்கும் மேலும் பல சீனத் தூதரகங்களை எப்போது வேண்டுமானாலும் மூட சொல்ல முடியும்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
சீனா தரப்பு என்ன சொல்கிறது?
முன்னதாக, அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூட அந்நாடு உத்தரவிட்டுள்ளதை "ஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு" என்று சீனா கருத்துத் தெரிவித்திருந்தது."சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தற்போதைய நிலைமையை சீனா ஒருபோதும் விரும்பவில்லை. இவை அனைத்திற்கும் அமெரிக்காவே பொறுப்பு." என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சீனாவின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க துணைத்தூதரகத்தை வரும் திங்கட்கிழமைக்குள் மூடுமாறு சீனா உத்தரவிட்டுள்ளதாக குளோபல் டைம்ஸின் ஆசிரியர் கூறுகிறார்.செங்டுவில் 1985ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த துணைத் தூதரகத்தில் பணியாற்றும் 200 பேரில் 150 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். திபெத்தின் தன்னாட்சி பிராந்தியத்தைப் பற்றிய தகவல்களை சேகரிக்க அமெரிக்காவுக்கு இந்த தூதரகம் உதவி செய்வதால் இது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஹாங்காங் விவகாரம்
சீன கம்யூனிச கட்சி அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பேயோ தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான பிரச்சனை மேலும் வலுப்பெற்றது.ஹாங்காங் விவகாரத்தில் சீனா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.சீன அரசின் இப்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்துமென அமெரிக்கா கூறியது.ஹாங்காங்கின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் பாதுகாப்பு சட்டத்தை இயற்றும் சீனாவை அமெரிக்கா நிச்சயம் தண்டிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment