செயற்கைக்கோள் படங்களால் சர்ச்சை




கொரோனா வைரஸ் முதல் முதலில் கடந்த நவம்பரில் தோன்றியதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனைகளுக்கு வெளியே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே போக்குவரத்து அதிகரித்ததைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் முதலில் கொரோனா வைரஸ் தொற்று 2019 நவம்பரில் காணப்பட்டதாக நம்பப்படுகிறது.

காரணம் தெரியாத நிமோனியோ நோய்த் திரள் ஒன்று குறித்து 2019 டிசம்பர் 31ம் தேதி உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தார்கள் சீன அதிகாரிகள்.

இந்நிலையில் ஆகஸ்டிலேயே வுஹான் மருத்துவமனைகளுக்கு எதிரே போக்குவரத்து அதிகரித்ததை செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதுடன், அதே காலத்தில் இணையத் தேடுபொறியில் இருமல், பேதி ஆகிய சொற்களைப் பயன்படுத்தி தேடுவது திடீரென அதிகரித்தது என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த ஆய்வு.

அபத்தமான தகவல்களின் அடிப்படையில் செய்யப்பட்ட கேலிக்குரிய ஆய்வு இது என்கிறது சீனா.

வுஹான் செயற்கைக்கோள் படங்கள் கிளப்பும் கொரோனா சர்ச்சைபடத்தின் காப்புரிமைAFP

"கொரோனா வைரஸ் உலகத் தொற்று தொடங்கிய காலம் என்று முன்னர் நம்பப்பட்ட காலத்துக்கு முன்னரே குறிப்பிட்ட நிலையில் சமூகத் தொந்தரவு ஏற்பட்டது தெளிவாகத் தெரிகிறது" என்று இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய டாக்டர் ஜான் பிரௌன்ஸ்டெய்ன் ஏபிசி செய்தியிடம் தெரிவித்தார்.

ஆனால், இந்த ஆய்வு பிற ஆய்வாளர்களால் பகுத்து ஆராயப்பட்டதல்ல. அதாவது ஆங்கிலத்தில் நன்கறிந்த சொற்றொடரில் கூறுவதானால் 'பியர் ரிவியூவ்டு' அல்ல.

இந்த ஆய்வு என்ன சொல்கிறது?

வுஹான் மருத்துவமனைகளுக்கு வெளியே 2018 மற்றும் 2019 முதுவேனில் மற்றும் இலையுதிர்காலங்களில் தனியார் செயற்கைக் கோள் மூலம் திரட்டப்பட்ட தரவுகளை இந்த ஆய்வுக் குழு ஒப்பிட்டு ஆராய்ந்தது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்றான டினாயூ மருத்துவமனைக்கு வெளியே 2018 அக்டோபரில் 171 கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததையும், அதே மருத்துவமனைக்கு வெளியே 2019 அக்டோபரில் 285 வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்ததையும் செயற்கைக் கோள் படங்களை வைத்து எண்ணிப் பார்த்து தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2019ம் ஆண்டு நின்ற வண்டிகளின் அளவு 67 சதவீதம் அதிகம் என்பதை சுட்டுகிறது இந்த எண்ணிக்கை.

வுஹான் செயற்கைக்கோள் படங்கள் கிளப்பும் கொரோனா சர்ச்சைபடத்தின் காப்புரிமைHARVARD UNIVERSITY
Image captionவுஹான் மருத்துவமனைகளில் வாகனங்கள் அதிகமானதை நோயாளிகள் அதிகரித்ததுடன் தொடர்புப்படுத்தும் ஆய்வாளர்கள்.

சீன இணையத் தேடுபொறியான 'பைடூ' மூலம் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தொடர்புடைய சொற்களைப் பயன்படுத்தி தேடுவது அதே காலத்தில் அதிகரித்தது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"அந்த நேரத்தில் வுஹானில் ஏதோ ஒன்று நடந்ததைக் காட்டும் வகையில் அமைந்த வளர்ந்துவரும் தகவல் திரட்டு இது," என்று ஏபிசி செய்தியிடம் குறிப்பிட்டார் பிரௌன்ஸ்டீன்.

"என்ன நடந்தது என்பதை முழுமையாக கண்டறிய, மக்கள் சமூகங்களில் இது போன்ற கொள்ளை நோய்கள் எப்படி உருவாகிப் பரவுகின்றன என்பதை கண்டறிய இன்னும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன. எனவே இது இன்னுமொரு ஆதாரம் அவ்வளவே" என்கிறார் அவர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

"போக்குவரத்து அளவை கவனிப்பது போன்ற அபத்தமான செயல் மூலம் இது போன்ற முடிவுக்கு வருவது கேலிக்குரியது. மிகவும் கேலிக்குரியது" என்று செவ்வாய்க்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்.

இந்த ஆய்வு ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தரவுகளில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜான் சுட்வொர்த். எடுத்துக்காட்டாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் குறிப்பிட்ட நாளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை எல்லா நேரத்திலும் ஒப்பிட முடியாது என்று கூறும் அவர், சில படங்களில் மேகங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

கொரோனா வைரஸ்

ஒருவேளை அப்போதே தொற்று (கண்டுபிடிக்கப்படாமல்) இருந்திருக்குமானால், அந்த நேரத்தில் வுஹானில் இருந்து வெளிநாடுகளுக்கும் சிலர் சென்றிருப்பார்கள். உலகின் பிற பகுதிகளில் ஆரம்ப காலத்திலேயே கொரோனா தொற்று இருந்ததைக் காட்டும் ஆதாரங்கள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன என்ற உண்மையோடு இது ஒத்துப்போகும் என்கிறார் பிபிசி செய்தியாளர்.

சீனா இந்த நோயை மூடி மறைத்தது என்று சொல்லவோ, தாமதமாக எதிர்வினையாற்றியது என்று சொல்லவோ இந்த ஆய்வை ஆதாரமாக காட்டுவது நியாயமற்றது என்கிறார் இந்த பிபிசி செய்தியாளர்.

ஏனெனில், முன்னெப்போதும் கண்டுபிடிக்கப்படாத ஒரு நோய் ஒரு சமூகத்தில் வேர்விடுமானால், அதிகாரபூர்வமாக அது கவனிக்கப்படுவதற்கு முன்பே கொஞ்சம் பரவல் நடப்பது சாத்தியமே என்றும் அவர் கூறுகிறார்.

காரணம் தெரியாத நிமோனியா பரவுவதாக உலக சுகாதார நிறுவனத்திடம் டிசம்பர் 31ம் தேதி தெரிவித்த சீனா, ஒன்பது நாள்கள் கழித்து, அந்த நிமோனியா நோயாளிகளிடம் புதிய கொரோனா வைரஸ் ஒன்றை கண்டுபிடித்ததாக தெரிவித்தனர். இதுவே பிறகு கோவிட்-19 என்ற நோய்க்கு காரணமான சார்ஸ் கோவ்-2 (Sars-CoV-2) வைரஸ் என்று பெயரிடப்பட்டது.

வுஹான் மற்றும் பிற சீன மாநகரங்களில் ஜனவரி 23ல் முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.

பிறகு சீனாவுக்கு வெளியே 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இதனை உலக அளவில் கவலை கொள்வதற்கான பொது சுகாதார அவசர நிலை என்று ஜனவரி 30-ம் தேதி அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.