ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறி இருப்பதாவது:-
பெருந்தொற்று நோயான கொரோனா பல்வேறு நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
இந்த சூழ்நிலையில், சுனாமியை போல் வெறுப்பு பேச்சுகளை பேசுவது, மற்றவர்களை பலிகடா ஆக்குவது, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது அதிகரித்து உள்ளது. இணையதளங்கள் மூலமும், வீதிகளிலும் வெளிநாட்டினருக்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுகின்றன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களும், அகதிகளும் நோய்த் தொற்றுக்கு காரணம் என்று கூறி அவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படும் சம்பவங்களும் நடந்து உள்ளன. முஸ்லிம்கள் தாக்கப்படும் நிகழ்வுகளும் நடந்து இருக்கின்றன.
இத்தகைய நடவடிக்கைகளுக்கும், வெறுப்பு பேச்சுகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். அனைவரையும் கண்ணியத்துடன் நடத்துவதோடு, அன்பை பரப்பவேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
கொரோனா தொற்றுக்கு முதியோர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் செலவை குறிப்பிட்டு மீம்ஸ்கள் வருவது கண்டிக்கத்தக்கது. தங்கள் பணிகளில் ஈடுபடும் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படுவதற்கும் முடிவு கட்டியாக வேண்டும். இதற்கான முயற்சிகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் குறிப்பாக சமூக ஊடகங்கள், இன பாகுபாடு காட்டுவது போன்ற சமுதாயத்துக்கு தீங்கு செய்யும் வகையிலான கருத்துகள் தங்கள் தளங்களில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப, கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
Post a Comment
Post a Comment