மரக்கன்றுகளின் பாதுகாப்பு கூடுகளை திருடியவர் கைது




பாறுக் ஷிஹான்


வீதியில் நடப்பட்ட  மரக்கன்றுகளின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட மரக் கூடுகளை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை   திருடி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் தேசிய மர நடுகை செயல்திட்டத்திற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தின் வங்கலாவடி தொடக்கம் மல்வத்தை பிரதேசம் வரையான அரச நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடப்பட்ட மரங்களின் பாதுகாப்பிற்காக மரக் கூட்டுத்தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட பாதுகாப்புக் கூடுகள் திருடப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய வனப் பரிபாலனை திணைக்களத்தின் உத்தியோகத்தர் மற்றும்  பெளதீக வள அதிகாரியினால்   முறைப்பாடு ஒன்று சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கிய   முறைப்பாட்டினை  அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எமு.நெளபீர் தலைமையில் சென்ற  பொலிஸ் உத்தியோகத்தர்  நவகீதன் உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

 மேலும்  பொலிஸ் ஊரடங்கு நேரத்தில்   சட்டத்தினை மீறி  குறித்த மரக்கூடுகளை திருடி  தன்னுடைய உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 56 வயதுடைய சந்தேக நபர் சனிக்கிழமை (09)  கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஈஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.