ஆடு மேய்த்த பெண்ணிடம், மாலையைப் பறித்தவன் யார்?




பாறுக் ஷிஹான்


வயல்வெளியில்    ஆடு  மேய்த்துக்கொண்டிருந்த வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கமாலையை மோட்டார் சைக்கிளில் சென்று அறுத்துச்சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை(8)  மாலை 4 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் வயல் பகுதியில்  ஆடுகளை 60 வயது மதிக்கத்தக்க வயோதிப பெண் ஒருவர்   மேய்த்துக்கொண்டிருந்துள்ளார்.

இவ்வேளை குறித்த பகுதியினூடாக வருகைதந்த 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான இளைஞர் குறித்த வயோதிப பெண்ணை நெருங்கி அவரது கழுத்தில் இருந்த ஒன்ரரை பவுண்  ரூபா 1 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க மாலையை அறுத்து தலைமறைவாகி இருந்தார்.

பாதிக்கப்பட்ட  குறித்த பெண்  சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கிய   முறைப்பாட்டினை  அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா   தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் உள்ளிட்ட குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் களவாடப்பட்ட    குறித்த தங்க நகையும் சந்தேக நபரினால் திருட்டு முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட  மோட்டார் சைக்கிளிலும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கைதான  சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.