எதிர்ப்பு




(க.கிஷாந்தன்)

தாம்  எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வேண்டும் என வலியுறுத்தி எல்ல பிரதேச செயலகத்துக்குட்பட்ட கினலன் தோட்ட மக்கள் (11.03.2020) அன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கினலன் தோட்டத்து தேயிலைகள் பிற தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், மாதாந்தம் அறிவிடப்படும் கோவில் கட்டணம் தோட்டத்துக்கு இன்னும் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

" கினலன் தோட்டத்தில்  தொழிற்சாலை இயங்கும் நிலையில் அங்குள்ள கொழுந்து வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அரைக்கப்படுகின்றது. வெளியிடங்களில் உள்ள கொழுந்து இங்கு எடுத்து வரப்படுகின்றது. இதன் பின்னணி தெரியவில்லை. இதனால் எமக்கு பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அதேபோல் கோவிலுக்கான கட்டணமாக மாதாந்தம் 500 ரூபா அறிவிடப்பட்டபோதிலும் கடந்த மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவு இன்னும் கோவிலுக்கு நிர்வாகத்தால் அனுப்படவில்லை.

இவை உட்பட எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என வலியுறுத்தியே வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டோம்." என தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

போராட்டம் தொடர்பில் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ், தோட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்படி கினலன் தோட்ட கொழுந்து அங்குள்ள தொழிற்சாலையிலேயே (12.30.2020) அன்று முதல் அரைக்கப்படும் என்றும், எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் ஆலயத்துக்கான பணம் செலுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.