ஏறாவூர் நகர சபை கடும் எதிர்ப்பு




மக்கள் அபிப்பிராயம் பெறப்படாமல் மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நூற்றுக்கணக்கானோர் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு தமது கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிடுவதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டிலிருந்து வருவோர் தங்கவைக்கப்பட்டுள்ளமையினால், மட்டக்களப்பு பிரதேசத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை குறித்து ஆராயும் விஷே‪ட கூட்டம் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் பிரதேச வைத்தியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நகர சபை உறுப்பினர்கள் நகர சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தொடர்ந்து தனது கருத்தை வெளியிட்ட நகர சபைத் தலைவர், “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குணமடைய வேண்டும். அவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாம் மனிதாபிமான ஆதரவை முழுமையாக வழங்கத் தயாராக உள்ளோம்.
ஆனால் கொரோனாவுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத அப்பாவி மக்களிடத்தில் கொரோனாவைக் கொண்டுவந்து வலிந்து திணிப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவந்து சிகிச்சையளிக்கப்படவிருப்பதையும் நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.
அத்கைய தீர்மானத்தை எந்தத் தரப்பு எந்த முனைப்போடு எடுத்திருந்தாலும் அதனை ஏறாவூர் நகர சபையினராகிய நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இந்தத் தீர்மானத்திற்கெதிராக எமது முழுமையான எதிர்ப்பையும் வெளிக்காட்டுகின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நகர நபையின் இந்தத் தீர்மானத்தை உடடியாக ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சுக்கும் அனுப்பி வைக்குமாறு நகர சபைத் தலைவர் அப்துல் வாஸித் நகர சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியாஹுல் ஹக்கைப் பணித்தார்.