இளம் பெண் கொலை வழக்கில், துப்பு துலக்க உதவிய தொழில்நுட்பம்




கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 19 வயது பெண்ணை யார் கொலை செய்தார் என்பதை கண்டு பிடிக்க தெலங்கானா போலீசுக்கு 21 நாட்கள் ஆனது. இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க 74 போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில் குற்றவாளியை கண்டறிய தொழில் நுட்பம் எப்படி உதவி இருக்க முடியும்?
தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில், நடுத்தர குடும்பங்கள் வாழும் பகுதி வித்யா நகர். இங்கு தான் கொமரையா மற்றும் ஒதெம்மா தம்பதி 19 வயது மகள் ராதிகாவுடன் வசித்தனர். ஒதெம்மா தின கூலியாக வேலை செய்தார். கொமரையா சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்கிறார்.
பிப்ரவரி 10ம் தேதி காலை, உடல் நிலை சரியில்லாத ராதிகா வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். போலியோ பாதிப்பை சரி செய்ய அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது தாய் ஒதெம்மா வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கொமரையா அருகில் இருந்த கடைக்கு சென்று திரும்பி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்றிருக்கிறார்.
அன்று மாலை நான்கு மணி அளவில், வீடு மிகவும் அமைதியாக இருந்ததால், அருகில் வசிப்பவர்கள் வந்து கதவை தட்டியுள்ளனர். யாரும் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தபோது ராதிகா கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது. கொமரையாவை யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை. வேலையில் இருந்ததால் அவரது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
74 காவல்துறையினரின் விசாரணையை முறியடித்த தொழில்நுட்பம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பிறகு ஹைதராபாத்தில் படித்துக்கொண்டிருந்த ராதிகாவின் சகோதரருக்கு, அருகில் வசித்தவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல் கூறினர். கொமரையா நண்பர்களை அவரது மகன் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி தன் தந்தையை விரைவாக வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். பிறகு வீட்டிற்கு வந்த கொமரையா தன் மகளின் நிலையை பார்த்து கதறி அழுதுள்ளார். அந்த நேரத்தில் போலீசாரிடம் பேசும் நிலையில் ராதிகாவின் பெற்றோர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
போலீசார் நடந்த சம்பவம் குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது தங்கள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். தடயவியல் குழுவும் ஆதாரங்களை சேகரித்தது.
ராதிகாவின் தொண்டை கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. எனவே நகை மற்றும் பணம் காணாமல் போனதையும், ராதிகாவின் மரணத்தையும் தொடர்புபடுத்தி விசாரிப்பதில் குழப்பம் நிலவியது. ஏனெனில் ராதிகா அணிந்திருந்த சில தங்க நகைகளை, திருடர்கள் எடுக்காமல் சென்றது ஏன் என்ற சந்தேகம் நிலவியது.
மேலும் கொலை நடந்ததற்கு ஒரே ஆதாரமாக இருப்பது கத்தி மட்டும் தான். அந்த கத்தியும் இரத்த கரை இன்றி கழுவப்பட்டு, வீட்டின் சமையல் அறையில் இருந்த தொட்டியில் கிடந்தது.
ஒரு கட்டத்தில் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு கடும் சவாலாக அமைந்தது. ஊடகங்களிலும் இந்த வழக்கு குறித்து பல விவாதங்கள் நடந்தன. 74 காவல் துறை அதிகாரிகளை கொண்ட குழு விசாரணையில் ஈடுபட்டிருந்தது.
குற்றவாளியை கண்டுபிடிக்க காவல் துறையினருக்கு உதவிய தொழில்நுட்பம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பிறகு இந்த கொலையை செய்தது குடும்ப உறுப்பினர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த எந்த பொருளிலும் கை ரேகைத் தடயம் இல்லை. திருட வந்த நபர் எந்த பொருளையும் தொடாமல் எப்படி திருட முடியும் என்ற கேள்வி எழுந்தது. கொலை செய்த நபர் ஏன் கத்தியை வீட்டிற்குள்ளேயே விட்டு செல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.
ராதிகாவிற்கு ஏதேனும் காதல் தோல்வி உள்ளதா? நண்பர்கள் யாராவது தொந்தரவு செய்து வந்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. ராதிகாவுடன் கல்லூரியில் படித்த ஓர் இளைஞர் அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் ராதிகா அதை ஏற்கவில்லை என்பது தெரியவந்தது. அந்த இளைஞரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது அந்த இளைஞருக்கும் நடந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
ராதிகாவின் குடும்பத்திற்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 3,200 தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அருகில் இருந்த வீடுகளில் உள்ள 110 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர். இருப்பினும் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை.
குற்றவாளியை கண்டுபிடிக்க காவல் துறையினருக்கு உதவிய தொழில்நுட்பம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இறுதியாக தடயவியல் குழுவின் உதவியுடன் ரத்த அணுக்களை கண்டறியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராதிகாவை கொலை செய்தது அவரது தந்தை தான் என்ற உண்மையை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
ரத்தம் இருந்த இடத்தை சுத்தம் செய்து விட்டாலும், ரத்தக் கரைபட்ட ஆடையை துவைத்து விட்டாலும் ரத்தம் இருந்த இடத்தை காட்டிக் கொடுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொலை செய்தது ராதிகாவின் தந்தைதான் என்பதை போலீசார் கண்டறிந்தனர். ராதிகாவின் தந்தை கொமரையாவின் ஆடையில் இரத்த கரை பட்டுள்ளது, அந்த கரையை துவைத்து சுத்தபடுத்தி அந்த ஆடையை கொலை நடந்த ஆன்றே கொமரையா வீட்டு மொட்டை மாடியில் காய வைத்துள்ளார்.
21 நாட்களுக்கு பிறகும் துவைக்கப்பட்ட ஆடையில் இருந்த இரத்தத்தை ஒரு தொழில் நுட்பம் கண்டுபிடித்து கொடுத்ததால்தான், கொலை செய்தது கொமரையா என்பதை கண்டு பிடிக்க முடிந்தது என்று கரீம் நகர் காவல் ஆணையர் கமலாசன் ரெட்டி பிபிசியிடம் கூறினார் .
குற்றவாளியை கண்டுபிடிக்க காவல் துறையினருக்கு உதவிய தொழில்நுட்பம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ராதிகாவின் தந்தை அளித்த வாக்குமூலத்தில், தனது மகளுக்கு தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் தான் மிகவும் சோர்வு அடைந்ததாலும், சிரமப்பட்டதாலும் கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இது வரை ராதிகாவுக்கு மட்டுமே 6 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதால் பண நெருக்கடிக்கு ஆளானதாலும், ராதிகாவுக்கு திருமணம் செய்துவைக்க வசதி இல்லாததாலும் அவரை கொலை செய்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது மட்டுமின்றி, கொமரையா இந்த கொலையை செய்ய திட்டமிட்டபின், தங்கள் வீட்டில் குடியிருந்த குடும்பத்துடன் வேண்டுமென்றே சண்டை போட்டு கொலை நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு, அதாவது பிப்ரவரி 6 ம் தேதி, வலுக்கட்டாயமாக அவர்களை வீட்டை காலி செய்ய வைத்துள்ளார்.
இதற்கான ஆதாரங்களை வைத்து கொலை செய்தது ராதிகாவின் தந்தை என்பதை உறுதிப்படுத்தினாலும், குறிப்பாக இந்த வழக்கில் தொழில்நுட்பம் தான் குற்றவாளியை கண்டு பிடிக்க உதவியதாக போலீசார் கூறுகின்றனர்.