(க.கிஷாந்தன்)
மலையக பெருந்தோட்டப்பகுதியில் சில தோட்டங்களில் எவ்வித சுகாதார தற்பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி தோட்டத் தொழிலாளர்கள் இன்று (24.03.2020) நாளாந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதுடன், கைகளை கழுவுதல் உட்பட தற்பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளைக்கூட பின்பற்றாமல் தொழிலில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்கியிருந்தாலும் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என தலவாக்கலை, அக்கரபத்தனை, டயகம பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
“ தோட்ட நிர்வாகங்களால் எவ்வித வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. பொலிஸ் ஊடரங்குச்சட்டம் அமுலில் இருக்கும் போது கூட நாளாந்த தொழில் நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.” என தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழுந்து கொய்தல் மற்றும் இதர வேலைகளில் ஈடுபட்டவர்கள், வேலை முடிந்ததும் கைகளை கழுவாமல் உணவு உட்கொள்வதையும் காணமுடிந்தது.
“ சம்பள முற்பணம் கூட இன்னும் வழங்கப்படவில்லை. ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்கூட பொருட்களை வாங்க முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.
கொழும்பு உட்பட வெளியிடங்களில் தொழில் புரிந்தவர்கள் கூட தற்போது வீடுகளுக்கு வந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிவருகின்றோம். எனவே, அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Post a Comment
Post a Comment