சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது




இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தமது நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
சவூதி அரேபியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்புக்குள்ளான 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே வெளிநாட்டு பயணிகளை தமது நாட்டிற்கு வருவதற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவிவருகின்ற நிலையில், ஏற்கனவே  இலங்கை உட்பட 13 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருவதற்கு கட்டார் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
சீனா, எகிப்து, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இலங்கை, இந்தியா, சிரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டார் தற்காலிகமாக தடை விதித்தது.
அதேவேளை, இலங்கை உட்பட 6 நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக குவைத் இரத்துச் செய்தது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகலாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், அந்நாட்டின் சுகாதார பிரிவினரின் பணிப்புரைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான விமானங்களுக்கு இவ்வாறு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.