மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமாக இருந்த பில்கேட்ஸ், மைக்ரோசாஃப்ட்டின் இயக்குநர் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது அத்தியாவசிய தொழில்நுட்ப பொருளாக உள்ள கணிமியை உலகம் முழுவதும் பிரபலமாக்கியதில் பில்கேட்ஸுக்கு மிகப் பெரிய பங்குண்டு. 1975-ம் ஆண்டு தன் பள்ளிக் கால நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். பில்கேட்ஸ் என்னதான் மைக்ரோ சாஃப்ட்டின் இணை நிறுவனராக இருந்தாலும் மைக்ரோ சாஃப்ட் என்று கூறியதும் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது இவரது பெயராகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு தன் நிறுவனத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்ந்தார்.
இப்படியான பெருமை பெற்றுள்ள பில்கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பதவியிலிருந்து விலகி இயக்குநர் குழுவில் வேலை செய்து வந்தார். தற்போது மொத்தமாக அந்த நிறுவனத்தின்போர்டு குழுவிலிருந்து விலகி ஆலோசகராக மட்டுமே பணியாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதே போன்று பில்கேட்ஸின் நெருங்கிய நண்பர் நடத்தி வந்த Berkshire Hathaway நிறுவனத்திலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்
தன் விலகலுக்கு விளக்கம் அளித்துள்ள கேட்ஸ், “ நான் பணியாற்றும் மைக்ரோசாஃப்ட் மற்றும் பெர்க்ஷயர் ஹாத்வே ஆகிய இரண்டு பொது நிறுவனங்களிலிருந்தும் விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். உலகளாவிய சுகாதாரம்,மேம்பாடு, கல்வி மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் எனது ஈடுபாடு அதிகரித்து வருவதால் இவற்றிற்கு முன்னுரிமை வழங்கி அதிக நேரம் செலவழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தன் லிங்கடின் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘மைக்ரோசாப்ட் எப்போதுமே எனது வாழ்க்கையின் பணிகளில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும், நிறுவனத்தின் பார்வையை வடிவமைக்கவும் லட்சிய இலக்குகளை அடையவும் சத்யா நாதெள்ளா மற்றும் தொழில்நுட்பத் தலைமையுடன் நான் தொடர்ந்து ஈடுபடுவேன். நிறுவனம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் குறித்து முன் எப்போதையும் விட நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன் ”என்று கேட்ஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் அதிக நேரத்தைச் செலவிடவே அவர் மைக்ரோ சாஃப்ட்டில் இருந்து விலகியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த அறக்கட்டளை உலகம் முழுவதும் உள்ள ஏழை குழந்தைகளுக்குக் கல்வி, சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றை வழங்குவதில் அதிக பங்காற்றி வருகிறது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்த அறக்கட்டளை 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடவுள்ளதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment