Coronavirus News: கொரோனோ வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு கோவிட்-19




தற்போது உலகை அச்சுறுத்தி வரும் புதிய கொரோனோ வைரஸால் தற்போது உருவாகியுள்ள நோய்க்கு கோவிட்-19 என அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின்தலைவர் டெட்ரோஸ், ''தற்போது இந்த நோய்க்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது இந்த பெயர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த நோயால் பல ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முடிந்தவரை இந்த புதிய வைரஸை எதிர்த்து கடுமையாக போரிட வேண்டும் என உலக நாடுகளையும், மக்களையும் டெட்ரோஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கடந்த சில நாட்களாகவே குழப்பங்களை தவிர்க்கவும், எந்த நாடு அல்லது குழு மீது முத்திரை குத்தப்படுவதை தவிர்க்கவும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நோய்க்கு அதிகாரப்பூர்வ பெயர் வைத்திட வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
''எந்த ஒரு தனி நபர், குழு, அல்லது விலங்கு என்று யாரையும் தொடர்புபடுத்தாமல் இருக்கும் விதத்திலும், அதேவேளையில் எளிதில் உச்சரிக்கும் விதத்திலும், இந்த நோய்க்கு தொடர்புடையதாகவும் இருக்கும் ஒரு பெயரை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவாலாக இருந்தது'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் இது குறித்து குறிப்பிட்டார்.
''கொரோனா'', ''வைரஸ்'' மற்றும் ''நோய்'' ஆகிய வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புதிய பெயருடன் இணைந்துள்ள 19 என்ற எண், இந்த வைரஸ் பரவ தொடங்கிய 2019 என்ற ஆண்டை குறிப்பதாகும். (கடந்த 31 டிசம்பரில் இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனத்துக்கு செய்தி அனுப்பப்பட்டது).
கோப்புப்படம்படத்தின் காப்புரிமைEPA
இதனிடையே சீனாவில் மேலும் 42000 பேருக்கு கொரோனோ வைரஸ் தாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2002-2003-இல் கடுமையான பாதிப்பை உருவாக்கிய சார்ஸ் நோய் தொற்றால் ஏற்பட்ட மரணங்களை விட தற்போது கொரோனோ வைரஸ் தாக்குதலால் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள சீனாவின் ஹூபே மாகாணத்தில் திங்கள்கிழமையன்று 103 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1016 பேர் இறந்துள்ளனர்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமையன்று, கொரோனா வைரஸ் குறித்துப் பொய் செய்திகளைப் பரப்பாதீர்கள். அது குறித்து கிண்டல் செய்யாதீர்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.
பொய் பரப்புரைகள் எங்களது முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
மீட்புப் பணியில் நமது கதாநாயகர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று கூறி உள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ், "தற்போது வெளிவரும் பல பொய் செய்திகள் நமது கதாநாயகர்கள் மேற்கொண்டுள்ள பணியை மேலும் சிரமமாக்கிவிடுகிறது," என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர், "உண்மையில் நாங்கள் வைரஸை எதிர்த்து போராடுவதைவிட, இதுபோன்ற பொய் செய்திகளை, கிண்டல்களை எதிர்த்துதான் அதிகம் போராடுகிறோம்," என்று அவர் கூறி உள்ளார்.