சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா முறை ரத்து




சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் இ-விசா முறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சீனாவுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
சீனாவில் மட்டும் 300க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கு காரணமான கொரோனா வைரஸின் தாக்கத்தை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், சீன குடிமக்கள் மட்டுமின்றி, சீனாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களும் இனி இந்தியா வருவதற்கு இ-விசா முறையை பயன்படுத்த முடியாது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீனாவுக்கான இந்திய தூதரகம், "தற்போது நிலவும் சில சூழ்நிலைகளின் காரணமாக, இ-விசாக்கள் மூலம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் செயல்முறை தற்காலிகமாக உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாடுகளின் விண்ணப்பதாரர்களுக்கும் இது பொருந்தும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
"இந்த அறிவிப்பின் மூலம், ஏற்கனவே இ-விசா வைத்திருக்கும் சீனாவை சேர்ந்தவர்களும் இனி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது. இந்தியாவுக்கு கட்டாயம் வர வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள், பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷாங்காய் அல்லது குவாங்சோவில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட நகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களை தொடர்பு கொள்ளலாம்" என்று அந்த பதிவில் சீனாவுக்கான இந்திய தூதரகம் கருத்துத் தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம், படிப்படியாக அந்நாட்டின் மற்ற நகரங்களுக்கு பரவியதோடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது.
இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவிலிருந்து வருவதற்கும், சீனாவிற்கு செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா ரத்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
முன்னதாக, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் சீனாவின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் தத்தமது நாட்டை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை தங்களது நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவில் மட்டுமே ஆட்கள் உயிரிழந்து வரும் நிலையில், தற்போது முதல் முறையாக வெளிநாட்டிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்தை சேர்ந்த அந்த 44 வயதுடைய நபர் அண்மையில் பிலிப்பைன்ஸ் வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.