(க.கிஷாந்தன்)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித தொழில் நிபந்தனைகளும் விதிக்கப்படாமல் அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டால் அதனை வாழ்த்தி வரவேற்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் மத்திய பிரிவு பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனர்நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 12.02.2020 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் ப.சிவநேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு என்பது நல்ல விடயம். வழங்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால் அதனை வாழ்த்தி வரவேற்போம்
எனினும், இந்த சம்பள உயர்வை அடிப்படையாகக்கொண்டு தொழிலாளர்களுக்கு தொழில் சுமை அதிகரிக்கப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 18 கிலோ என்பது அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. மழைக்காலங்களில் கொழுந்து இருக்கும். ஆனால், வெயில் காலங்களில் அது சாத்தியப்படாது. தற்போதைய காலநிலையில் 18 கிலோ கொழுந்து கொய்வதே கடினமாகத்தான் இருக்கின்றது.
எனவே, என்ன நடக்கபோகின்றது என்பதை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அடிப்படை சம்பளமாக ஆயிரம் கிடைத்தால் நிச்சயம் வரவேற்போம். மற்றவர்களைப்போல் காலைவாரும் செயலில் ஈடுபடமாட்டோம்.
நாம் 50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முற்பட்டவேளை இங்குள்ள அமைச்சரும், நவீன் திஸாநாயக்கவும் இணைந்து நாடகமாடி அதனை தடுத்து நிறுத்தினார்கள்.
"அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு நான் ஒருபோதும் 'பந்தா' காட்டியதில்லை. நாடக அரசியலை முன்னெடுத்ததும் கிடையாது. எனது மனசாட்சியின் பிரகாரம் மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கியுள்ளேன். அந்த சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக பொதுத்தேர்தலில் எமக்கு ஆணை வழங்குமாறு மக்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்." -
"100 நாட்கள் ஆட்சியின்போது நான் பல வீடுகளை நிர்மாணித்துக்காட்டினேன். ஆனால் மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் மலையகத்திலுள்ள தமிழ் அமைச்சர் என்ன செய்துள்ளார்? எமது ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக்கூட பயனாளிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனை உடனடியாக செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்." எனவும் திகாம்பரம் குறிப்பிட்டார்.
" ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஆட்சியின்போது கடந்த நான்கரை வருடகாலப்பகுதியில் எமது மக்களுக்காக உணர்வுப்பூர்வமாக வேலைகளை செய்துள்ளேன்.
பல வருடங்களாக எமது மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்து வந்த தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்தேன். காணி உரிமையுடன் மக்கள் சொந்த வீட்டில் வாழும் யுகம் உருவாகியுள்ளது. பல தோட்டங்கள் கிராமங்களாக மாறின.
மலையக அதிகார சபை உருவாக்கம், நுவரெலியா மாவட்டத்துக்கு பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு, பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் என உரிமைசார் அரசியலுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டு மக்களின் சமூகநிலையை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அமைச்சுப் பதவியை பொறுப்பேற்று 100 நாட்கள் ஆட்சியின்போது பல வீடுகளை கட்டினேன். ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் தற்போதுள்ளவர்கள் ஒன்றும் செய்யவில்லை. நான் உங்களில் ஒருவன். உங்களின் பிள்ளை. எனவே, உங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு இருக்கின்றது.
விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். எமது கூட்டணியின் சார்பில் நான், திலகராஜ், இராதாகிருஷ்ணன், உதயகுமார் போட்டியிடவுள்ளோம்.
எனவே, மலையகத்தில் சமூகமாற்றத்தை அடிப்படையாகக்கொண்ட எமது வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எமக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
அதேவேளை, எமது ஆட்சியின் போது அடிக்கல் நாட்டப்பட்ட, நிர்மாணிக்கப்பட்ட நிலையில் ஆயிரம் வீடுகள் உள்ளன. பாதை அமைத்து, மின்சார வசதிகளை ஏற்படுத்தினால் அவற்றை பயனாளிகளிடம் கையளித்து விடலாம். எனவே, அதனை விரைந்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் நாடக அரசியல் நடத்துவது கிடையாது. தேர்தல் காலம் என்பதால் பலர் நாடகங்களை அரங்கேற்றலாம். எனவே அத்தகையவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.
Post a Comment
Post a Comment