சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்சமயம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் சுமார் 12,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை உலகம் முழுக்க 25 நாடுகளில் சுமார் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், ஆன்லைனில் கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில், ஃபேஸ்புக் தளத்தில் கொரோனா வைரஸ் பற்றிய போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையை துவங்கி இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு முரணாக இருக்கும் தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என ஃபேஸ்புக் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
உலகளவில் போலி செய்திகள் அதிகளவு பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய போலி தகவல்களை எதிர்கொள்வது சமூக வலைதள நிறுவனங்களுக்கு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கில் ஆரோக்கியம் சார்ந்த விவரங்கள் தேடல் மற்றும் விளம்பரங்கள் மூலம் பயனர்களுக்கு சென்றடைவதை கட்டுப்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் உண்மையான விவரங்கள் மட்டும் அனைவரும் பார்க்க வழி செய்கிறது.
தளத்தில் போலி செய்திகளை முடக்குவது ஃபேஸ்புக்கிற்கு புதிய காரியமில்லை. முன்னதாக சமோவா சார்ந்த போலி செய்திகள் அதிகளவு பரவியதால் ஃபேஸ்புக் நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. பின் சமோவா சார்ந்த போலி செய்திகளை ஃபேஸ்புக் தனது தளத்தில் இருந்து நீக்கியது.
Post a Comment
Post a Comment