எதிர்ப்பு




(க.கிஷாந்தன்)

பொருளாதார அபிவிருத்தி அதிகாரியின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து  அக்கரபத்தனை, மன்றாசி உட்லெக் தோட்ட மக்கள் அக்கரபத்தனை - தலவாக்கலை வீதியில் உட்லெக் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவில் உதயமான, கிராமிய அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்ட 'சுபிரி கிராமம்'  வேலைத்திட்டத்துக்காக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் தலா 20 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும்.

பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் தலைமையில் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டம், பிரதேச செயலாளரால் கண்காணிக்கப்படும். எனினும்,  குறித்த நிதியில் கிராமத்துக்கு எவ்வாறான அபிவிருத்தியை  முன்னெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதேச வாசிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.

எனினும், பிரதேச வாசிகளின் தேவை அறியாது, அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காது, நுவரெலியா மாவட்ட ,அக்கரபத்தனை - மன்றாசி பகுதிக்கான பொருளாதார அபிவிருத்தி அதிகாரி தன்னிச்சையாக செயற்படுகிறார் என்றும், இதனால் தமக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டியுமே உட்லெக் தோட்ட  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

" உட்லெக் தோட்டத்தில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் வாழ்கின்றோம். எனினும், குடிநீரை பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றோம். 

எனவே, தண்ணீர் தாங்கியொன்றை அமைக்குமாறும், வீதி அபிவிருத்திக்கு எஞ்சிய தொகையை பயன்படுத்துமாறும் கோரினோம். ஆனால், வீதி மட்டுமே அமைக்கப்படும் என்பதில் பொருளாதார அபிவிருத்தி குறியாக இருக்கின்றார். இதனை ஏற்கமுடியாது." என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.