விவசாய பிரச்சினைகளுக்கு,தீர்வு




(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டம் கொத்மலை  பிரதேச செயலகத்துக்குட்பட்ட புரட்டொப், கெமினிதன் மற்றும் வெதமுல்ல ஆகிய தோட்டங்களில் வாழும் மக்கள், விவசாய நடவடிக்கையின் போது எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு - இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டுடன் உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி தோட்டங்களில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களிடம் குத்தகைப்பணம் அறிவிடுவதில்லை என்றும், வியாபார நோக்கில் வெளியாருக்கு காணிகளை வழங்குவதில்லை என்றும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரையின் பேரில், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, தோட்டங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டு -  பெருந்தோட்டக் கம்பனிகளின் பணிப்பாளர்கள் மற்றும் தோட்ட முகாமையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பயனாகவே நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த விவசாயிகளுக்கு விடிவு பிறந்துள்ளது.

புரட்டொப், கெமினிதன், வெதமுல்ல ஆகிய தோட்டங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தோட்ட மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கம்பனிகள் தயாராகிவந்ததுடன், மிகவும் அநீதியான முறையில் குத்தகைப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தோட்ட மக்கள் இ.தொ.காவின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானிடம் முறையிட்டதையடுத்து சம்பந்தப்பட்ட தரப்புகளை அமைச்சுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், தொழிலாளர்களுக்கு நீதி  நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமிக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி கம்பனிகளின் பணிப்பாளர்கள், தோட்ட முகாமையாளர்களுடன்  கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பாரத் அருள்சாமி, குறித்த தோட்டங்களில் முன்பிருந்தே விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களிடம் குத்தகைப் பணம் அறிவிடக்கூடாது, அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கை கைவிடப்பட வேண்டும், வியாபார நோக்கங்களுக்காக தோட்டக்காணிகள் வெளியாருக்கு வழங்கப்படக்கூடாது என பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.

இவற்றுக்கு கம்பனிகளும் உடன்பட, தோட்ட விவசாயிகள் எதிர்கொண்ட பாரிய பிரச்சினைகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. இனி அச்சமின்றி மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று பாரத் அருள்சாமி தெரிவித்தார்.