இந்தியாவுக்கு எதிரான ஆறு ஆண்டு கால அவலத்தை அழிக்குமா நியூசிலாந்து?




இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சில் நியூசிலாந்து எட்டு விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் எடுத்து.
இந்திய அணிக்காக யுஸ்வேந்திர சஹால் மூன்று விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் 347 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியாமல் போன இந்திய அணி இன்று வெற்றிபெற்றால் மட்டுமே தொடர் சமநிலைக்கு வரும்.
புதனன்று நடந்த முதல் போட்டியில் 48.1 ஓவரிலேயே 348 ரன்கள் எடுத்த நியூசிலாந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முன்னதாக நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளிலும் இந்தியா வென்றிருந்த நிலையில் இந்தத் தோல்வி இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அந்த அணியே தொடரையும் கைப்பற்றும்.

ஆறு ஆண்டுகளாக வெல்லாத நியூசிலாந்து

ஜனவரி 2014க்கு பிறகு நியூசிலாந்து இதுவரை இந்தியாவுடனான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதையும் வெல்லவில்லை.
அந்த ஆண்டு 4-0 என்ற கணக்கில் வென்ற நியூசிலாந்து, அதன் பின்னர் நடந்த மூன்று ஒரு நாள் தொடர்களிலும் இந்தியாவிடம் தோல்வியையே சந்தித்தது.
ஒரு வேளை இன்று நியூசிலாந்து வென்றால் ஆறு ஆண்டு கால கரும்புள்ளியை நீக்க இன்று அந்த அணிக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.