“இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என்றால் நான் முதல் ஆளாக போராடுவேன்”




பிரிவினை காலத்தில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லாமல் இங்கேயே வாழ்வோம், இங்கேயே சாவோம் என்று முடிவெடுத்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் கிடையாது அப்படி அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றால் நான் அவர்களுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து ரஜினிகாந்த் இதுவரை எதுவும் பேசவில்லை என்று அவர் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பியபோது ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்தார்.
"குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளனர். எனினும் சில அரசியல் கட்சிகளும் மதகுருக்களும் தங்கள் சுயலாபத்துக்காக போராட்டங்களை தூண்டி விடுகின்றனர்," என ரஜினிகாந்த் குற்றம் சாட்டினார்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் வாழ்க்கையே பறிபோகும் என்றார் ரஜினிகாந்த்.

என்.பி.ஆர் அவசியம் தேவை

இந்தியாவில் வெளிநாட்டவர்கள் யாரேனும் சட்டவிரோதமாக வசிக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) அவசியம் என்று கூறிய ரஜினிகாந்த், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதுகுறித்து எதுவும் கூற முடியாது என்றார்.

இலங்கை தமிழ் அகதிகள்

குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை என்பது குறித்தும் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவிலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றார் ரஜினிகாந்த்.
எனினும், சோழர் காலத்தில் இருந்தே இலங்கையில் இருக்கும் தமிழர்களை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றார் அவர்.

'நேர்மையாக வரி செலுத்துபவன் '

கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதாக சமீபத்தில் தம் மீதான விமர்சனங்கள் எழுந்தது குறித்த கேள்விக்கு பதில் கூறிய ரஜினிகாந்த் தாம் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்றார்.
ரஜினிகாந்த் வட்டிக்கு பணம் கொடுத்ததன் மூலம் பெற்ற வருவாய்க்கு வரி செலுத்தாதது தொடர்பான வழக்கை வருமான வரித்துறை ரத்து செய்தபின் இந்த விவகாரம் விமர்சனத்துக்கு உள்ளானது.
"நான் நேர்மையாக வரி செலுத்துபவன். இது வருமான வரித்துறைக்கும் தெரியும்," என்றார் ரஜினிகாந்த்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்திடம் இருந்து தமக்கு இதுவரை எந்த அழைப்பாணையும் வரவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.