சவேந்திர சில்வாவிற்கு விடுக்கப்பட்ட தடையை மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம்




சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் தீர்மானமாக போதிய நம்பத்தகு சாட்சியங்களின் அடிப்படையில் மனித உரிமை மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டுள்ளார் என்பதை அடையாளம் கண்டதையிட்டு நாம் மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம் என்றும் அவர் கூறினார்.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடை தொடர்பாக அவரிடம் வினவியபோதே சி.வி.விக்னேஷ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சில்வா சட்டத்திற்குப் புறம்பான சாகடித்தல்களை நடத்துமாறு ஆணையிட்டார் என்பதற்கு ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை சனல் 4 ஆவணப்படுத்தியுள்ளது என்றும் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி மூலம் தரப்பட்ட அதன் அறிக்கையில், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பிய ஆணையை சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது படையணி அலுவலர்களுக்கு மறு ஒலிபரப்பு செய்த போது பின்வரும் சில்வாவின் கட்டளையும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சில்வாவின் இந்தக் கட்டளையானது தமிழ் மக்களின் பாரிய எண்ணிக்கையிலான குறிப்பாக அப்பாவி பொது மக்களையும் சரணடைந்த போராளிகளையும் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களையும் படுகொலைகளுக்கு இடமளித்தது என்றும் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
சில்வாக்கெதிரான அமெரிக்காவின் பயணத்தடை மற்றைய நாடுகளும் பின்பற்றக் கூடிய ஒரு காரியமாக அமைகின்றது என்றும் இலங்கையில் படையணியினரால் ஆற்றப்பட்ட போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக சர்வதேச நாடுகள் வழக்குத் தொடர வேண்டிய அத்தியாவசிய கடப்பாட்டினை இந்தக் காரியம் கோடிட்டுக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.