ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு




ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களுக்கு கொரோனா

ஜப்பானில் சிக்கியுள்ள `டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அந்த கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த கப்பல் பணியாளர்கள் மற்றும் பயணிகளிடம் தொடர்பில் உள்ளது. தற்போது பயணிகளும், கப்பல் ஊழியர்களும் ஜப்பான் அதிகாரிகளால் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்," என்றும் ஜெயசங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

`டைமண்ட் பிரின்ஸஸ்`

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த `டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் 200க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சீனாவை தவிர கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள இடம் இந்த கப்பல்தான்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்று மேலும் பலருக்கு பரிசோதினை செய்யப்படவுள்ளது.

வீடியோ வெளியீடு

கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், இதுவரை இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆனால் தங்களை ஒன்றாக வைத்திருந்தால் தங்களுக்கும் தொற்று வர ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு உதவி வேண்டும் என்று பேசும் அவர், தங்களுக்கு நோய் பாதிப்பு வருவதற்குள் தங்களை காக்குமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் ஹாசன், நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் குமார் இது தொடர்பாக பேசி தங்களை மீட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் மற்றும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"ஜப்பானின் யோக்கோஹோமா துறைமுகத்தில் டைமண்ட் பிரின்சஸ் என்னும் கப்பல் கடந்த 9 தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் உள்ள 3500 பேரில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் கப்பலில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை,"
"கப்பலில் உள்ளவர்களில் அன்பழகன் என்பவர் மதுரையை சேர்ந்தவர், கப்பலில் பணியாற்றும் அந்த ஊழியர் தனது நண்பர்களுக்கு வாட்சப் செய்தி அனுப்பியுள்ளார், அதில் சுமார் 100 இந்தியர்கள் அந்த கப்பலில் இருப்பதாகவும் அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே இதில் தாங்கள் தலையீட்டு இந்திய ஊழியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும்," என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாடுகளால் திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்

வெஸ்டர்டம் கப்பல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்நிலையில் வெஸ்டர்டம் என்னும் மற்றொரு கப்பல் கம்போடியாவில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் உள்ள 2000க்கும் அதிகமான நபர்களுக்கு எந்தவித தொற்றும் இல்லை.
அமெரிக்காவை சேர்ந்த ஹாலாந்து அமெரிக்க லைனிற்கு சொந்தமான வெஸ்டர்டாம் கப்பல் பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று ஹாங் காங்கிலிருந்து கிளம்பியது. அதில் 1455 பயணிகளும், 802 கப்பல் ஊழியர்களும் உள்ளனர்.
இந்த கப்பல் இரண்டு வாரங்களுக்கு பயணிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது எந்த நாட்டிலும் அந்த கப்பலை நிறுத்த அனுமதி தராததால் உணவு மற்றும் எரிபொருள் தீர்ந்து போகும் நிலை ஏற்படவிருந்தது.
இந்த கப்பல் தாய்லாந்து, தைவான், குவாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் திருப்பி அனுப்பப்பட்டது.
"நாங்கள் பல சமயங்களில் கப்பல் நிறுத்தப்படும்; நாம் வீட்டிற்கு செல்லப்போகிறோம் என்று நினைத்தோம், ஆனால் எங்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே," என்று ராயர்டர்ஸ் செய்தி முகமையிடம் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்சலா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாதாக மற்றொரு கப்பல் ஒன்று ஹாங்காங் கரையில் பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கப்பலிலில் இருந்து வெளியே சென்றவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.