தனித்து களமிறங்குவது தொடர்பில்,பரிசீலனை




(க.கிஷாந்தன்)

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் நிலை உருவாகியுள்ளதால் பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது என்றும் இது தொடர்பில் அடுத்தவாரம் இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கூட்டணியின் பிரதித் தலைவருமான முன்னாள் அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளது என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் தலவாக்கலையில் ஊடகவியலாளர்கள் 24.01.2020 அன்று அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

“ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நிலவுகின்ற தலைமைத்துவப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பொதுத்தேர்தலை அக்கட்சி உறுப்பினர்கள் ஓரணியில் எதிர்கொள்வார்களா அல்லது இரு அணிகளாக பிரிந்து நின்று போட்டியிடுவார்களா என்பது பற்றியும் முடிவு இல்லை.

உட்கட்சி மோதல் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சியால் தனக்கான வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மறுபுறத்தில் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தற்போதிருந்தே தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணில் உள்ளவர்களும், மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டு வருகின்றது.

கூட்டணியின் உயர்பீடம் அடுத்தவாரம் கூடும்போது உறுதியான முடிவை எடுக்கக்கூடியதாக இருக்கும். தனித்து களமிறங்கிவிட்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவதா அல்லது கூட்டாகவே தேர்தலை எதிர்கொள்வதா என்பது பற்றியும் இதன்போது ஆராயப்படும்.”என்றும் முன்னாள் அமைச்சர் கலாநிதி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வடக்குஇ கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முற்போக்கு கூட்டணியும் எல்லா இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துமா என்ற வினாவுக்கு,

“வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் – அதாவது மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ அப்பகுதிகளில் எல்லாம் போட்டியிட வேண்டும் என்பதே உத்தேச திட்டமாக இருக்கின்றது.” என பதிலளித்தார் அவர்.

அத்துடன், தனித்து களமிறங்கும் முடிவு எடுக்கப்படும் பட்சத்திலேயே போட்டியிடும் சின்னம், தொகுதிகள் பற்றி அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால்தான் தனிவழி பற்றி ஆராய்ந்து வருகின்றோம். மாறாக அரசாங்க தரப்பும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தேர்தலின் பின்னர் கூட மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் இராதாகிருஷ்ணன் இடித்துரைத்தார்.