சித்தி - 80ஸ் கிட்ஸ் அனைவரிடமும் சென்று சேர்ந்த தொலைக்காட்சி தொடர். இப்போது 90ஸ் கிட்ஸ் வெப் சீரிஸ் என அப்டேட் ஆகிவிட்டார்கள்.
ஒரு பாஸ்வேர்டை ஒரு குழுவே பகிர்ந்து கொண்டாலும் Money Heist, Made in Heaven என வெப் சீரிஸை பார்த்து சமூக ஊடகங்களில் அலசி ஆராய்கிறார்கள்.
வெப் சீரிஸ், இணையத்தில் திரைப்படங்கள், அனைவரின் மொபைலிலும் 24 மணிநேரமும் பொழுது போக்கு அம்சங்கள் உள்ள இந்த நேரத்திலும் 90ஸ் கிட்ஸ் மீண்டும் சித்தி 2 வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனரா?
சித்தி நினைவலைகள்
சினிமா பிரபலமாக இருப்பவர் தொலைக்காட்சி தொடரில் நடித்து, நீண்ட காலம் ஊடகத்துறையில் பயணிக்கலாம் என்பதை முதல் முதலில் நிரூபித்தவர் நடிகை ராதிகா.
சித்தி தொடர் ஆரம்பித்து நான்காம் நாள் இறுதியில் தான் பாரதியார் கவிதை சொல்லி தன் குரலை தொலைக்காட்சியில் பதிவு செய்தார் ராதிகா. அன்று திரைத்துறையில் சாதித்த ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி தன் குரலையும் நான்கு நாட்களுக்குப் பிறகு தான் வெளிப்படுத்தினார். அதுவரை மக்கள் காத்திருந்தனர். முதல் மூன்று நாட்களுக்கும் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி '' சித்தி சித்தி '' என அழைத்துக்கொண்டே இருந்தார். இவ்வாறான வித்தியாசமான பாணியில் 1999ல் தொடங்கிய சித்தியின் குரல் 2001ம் ஆண்டு வரை அனைவரின் இல்லத்திலும் ஓங்கி ஒலித்தது.
''கண்ணின் மணி கண்ணின் மணி'
''கண்ணின் மணி கண்ணின் மணி'' எனத் தொடங்கும் சித்தி தொடரின் பாடல், தொடர் கவனம் பெரும் முன்பே மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தினா இசை அமைத்த இந்த பாடலை, இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் யூ டியூபில் கேட்கின்றனர்.
தொடரின் பாடலில் மாவட்ட ஆட்சியராகத் தோன்றும் ராதிகா, ஏன் மாவட்ட ஆட்சியர் பொறுப்பை விட்டு விலகி ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார் என்ற காரணத்தைத் தெரிந்துகொள்ள 100 எபிசோடுகள் தாண்டியும் மக்கள் ஆர்வம் குறையாமல் காத்திருந்தனர்.
சீரியலில் வலிமையான ''நாட்'' வைக்கும் கலாசாரத்தை சித்தி தொடர் உருவாக்கியது என்றே கூறவேண்டும்.
பொதுவாகவே தொலைக்காட்சி தொடரில் மாமியாரை வில்லியாக சித்தரித்து வந்த நேரத்தில், வர்த்தக ரீதியாக இரு பெண்கள் போட்டிப்போட்டு பொறாமை கொள்ளும் பெண்ணாக ''பிரபாவதி'' என்ற கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
சித்தியில் இரு வேடத்தில் நடித்த ராதிகா, தங்கை கதாபாத்திரத்தில் அநியாயங்களைத் தட்டி கேட்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அக்கா ராதிகா மாவட்ட ஆட்சியராக நடித்திருப்பார். பெண்கள் மட்டுமே சீரியல் பார்த்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், இரு பெண்கள் கைகளில் அதிகாரம் இருப்பது போல சித்தரித்து இருந்தது, பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.
ஒரு பெண்ணின் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் இரண்டும் நன்கு தெரிந்த ஒரு நண்பர், ஒரு பாதுகாவலர் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணுடன் பயணிக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் மனதிலும் கனவாக இருக்கும் ஒரு கற்பனை கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை யோகி மிகவும் கண்ணியமாக நம்முன் கொண்டுவந்திருப்பார்.
பொதுவாக இரண்டாவதாக அப்பாவை திருமணம் செய்யும் சித்தி குழந்தைகளைக் கொடுமை படுத்துபவராகவே திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவார்கள். ஆனால் இந்த தொடரில் வரும் சாரதா சித்தி அனைவரையும் அரவணைத்து அடைக்கலம் கொடுப்பார். சித்தி என்ற வார்த்தை குறித்து இருந்த ஒரு தவறான புரிதலை அந்த தொடர் மாற்றியது.
பிரசாத்தாக நடித்த விஜய் ஆதித்யராஜ், விஜியாக நடித்த தீபா வெங்கட் ஒரு கட்டத்தில் சித்தி தொடரின் முகங்களாகவே மாறினர்.ரான குரல், தொழில் முன்னேறுவதற்கு உள்ள தடைகளை மீண்டு வர தேவையான தைரியம் என முக்கிய விஷயங்களைப் பேசும் முதல் பிரபலமாக நடிகை ராதிகா திகழ்ந்தார் என்றே சொல்லலாம்.
பல மொழிகளில் வெற்றி பெற்ற சித்தி
ரடான் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி, தொலைக்காட்சி தொடர் மற்றும் சில திரைப்படங்களையும் ராதிகா தயாரித்துள்ளார். நடிகையால் பல பணிகளை செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். சித்தி தொடர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் வெற்றி பெற்றது. 2001ம் ஆண்டு தமிழில் இந்த தொடர் முடிவடைந்த பிறகு மலேசிய மற்றும் லண்டனில் வாழும் தமிழர்களுக்காக அங்குள்ள தனியார் தொலைக்காட்சி சேனலில் மீண்டும் ஒளிபரப்பானது. தொலைக்காட்சி வர்த்தகம், தயாரிப்பு என தனக்கு புதிதான ஒரு துறையில் தடம் பதிப்பது குறித்து ரடான் நிறுவனர் ராதிகா அஞ்சவில்லை.
ரம்யா கிருஷ்ணன், தேவயானி, சரிதா, பானுப்பிரியா என பல திரைப்பட நடிகைகள் தொலைக்காட்சியில் தடம் பதிக்க ராதிகா சிறந்த முன்னோடியாக திகழ்ந்தார்.
சித்தி 2
நாளை முதல் சித்தி 2 ஒளிபரப்பாக இருக்கிறது.
ராதிகாவின் கணவராக பொன்வண்ணன் நடிக்கிறார். சித்தி முதல் தொடரில் பேசப்பட்ட சமூக பிரச்சனைகள், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் என பல விஷயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் மெட்டி ஒலி, அண்ணி, கோலங்கள் என பல தொலைக்காட்சி தொடர்கள் பேசிவிட்டன. தற்போது வட மாநில சீரியல்களின் தமிழாக்கமும் முக்கியத்துவம் பெரும் வேலையில் ''சித்தி 2'' சின்னதிரையில் பெரும் சவாலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
தினமும் சித்தி தொடரின் பாடல் துவங்கி எழுத்து சி ஜே பாஸ்கர் என்ற பெயர் பலகையுடன் முடியும் வரை சேனலை மாற்றாமல் பார்க்கும் போக்கு தமிழகத்திலிருந்தது. இன்று டிஜிட்டல் யுகத்தில் சித்தி 2 அவ்வளவு முக்கியத்துவம் பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Post a Comment
Post a Comment