மதங்கள் குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ள கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் விருந்தினராக கலந்துகொண்ட ஷாருக் கான் போட்டியாளர்களுடன் சேர்ந்து நடனமாடியதுடன், பல்வேறு விடயங்கள் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் மதங்கள் குறித்து ஷாருக் பேசிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில், தான் தனது குழந்தைகளான சுஹானா, ஆர்யன், ஆப்ராம் ஆகியோர் தங்களை இந்தியர்கள் எனும் மதத்தை சேர்ந்தவர்கள் என்று கருத வேண்டுமென கற்றுக்கொடுத்துள்ளதாக கூறுகிறார்.
"எங்களுக்கு இடையில் இந்து - முஸ்லிம் என்று எவ்வித பேதமும் இல்லை. என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனது குழந்தைகள் இந்தியர்கள்" என்று அந்த காணொளியில் ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.
தனது மகள் சுஹானாவை பள்ளியில் சேர்க்கும்போது அவர் தனது மதம் என்னவென்று கேட்டதாக ஷாருக் கான் அந்த காணொளியில் கூறியுள்ளார்.
"பள்ளியில் எனது மகளை சேர்க்கும்போது, விண்ணப்பப் படிவத்தில் மதம் எனும் கேள்வி இருந்தது. அப்போது, எனது மகள் 'அப்பா, நமது மதம் என்ன?' என்று கேட்டாள். நான் அதில் இந்தியர்கள் என்று எழுதிவிட்டு, நமக்கு மதம் என்று ஒன்று இல்லவே இல்லை; அப்படி ஒன்று நமக்கு தேவையும் இல்லை என்று கூறினேன்" என்று கூறும் ஷாருக் கானின் அந்த காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.
ஷாருக் கானின் இந்த பேச்சுக்கு சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் பாராட்டுகளை தெரிவித்தாலும், சிலர் அவர் மீது பல கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment