#இங்கிலாந்து அபார வெற்றி




ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் 191 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 3-1 என தொடரை கைப்பற்றியது. வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ரன், தென் ஆப்ரிக்கா 183 ரன் எடுத்தது. 217 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 248 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஹெண்ட்ரிக்ஸ் 5 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, 466 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, 77.1 ஓவரில் 274 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. வான் டெர் டஸன் அதிகபட்சமாக 98 ரன் (138 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். மாலன் 22, எல்கர் 24, கேப்டன் டு பிளெஸ்ஸி 35, டி காக் 39, பவுமா 27, பிலேண்டர் 10 ரன் எடுத்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 4, பிராடு, ஸ்டோக்ஸ் தலா 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். 191 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. அந்த அணி ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்புக்கான 30 புள்ளிகளையும் தட்டிச் சென்றது. முதல் இன்னிங்சில் 5, 2வது இன்னிங்சில் 4 என 9 விக்கெட் வீழ்த்திய மார்க் வுட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன்: பென் ஸ்டோக்ஸ். இந்த போட்டியுடன் தென் ஆப்ரிக்க வேகம் வெர்னான் பிலேண்டர் (34 வயது) ஓய்வு பெற்றார். அவர் 64 டெஸ்டில் 224 விக்கெட் (சிறப்பு 6/21) மற்றும் 1779 ரன் (அதிகம் 74, சராசரி 24.04, அரை சதம் 8) எடுத்துள்ளார்.