மலேசிய பிரதமரின் அரசாங்கமும் தனது அரசாங்கமும் ஒரே மாதிரியான பிரச்சனையை சந்தித்து வருகிறது," என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசால் தனது அரசு சந்திக்கும் சிக்கல் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் எழுதிய வலைப்பூவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் புதிதாக பொறுப்பேற்கும் ஒரு கட்சி கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த ஊழலால் ஏற்பட்ட சரிவுகளை சரி செய்வதில் பல சவால்கள் உள்ளன என மலேசிய பிரதமர் மகாதீர் தனது வலைப்பூவில் தெரிவித்திருந்தார்.
மேலும் மலேசியாவில் ஆட்சி பொறுப்பில் இருந்த முன்னாள் அரசாங்கம் நிதி பற்றாக்குறையுடன் நாட்டை ஒப்படைத்து விட்டு சென்றனர் என்று தெரிவித்துள்ள மகாதீர், அனைத்து அரசு நிறுவனங்களையும் ஒரே இரவில் பேரழிவில் இருந்து காப்பது எளிதல்ல என்றும் தான் எழுதிய வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.
மகாதீரின் இந்த கருத்துகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்வீட்டர் பக்கத்தில் ''முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் மிகவும் அனுபவம் வாய்ந்த, திறமையான அரசியல்வாதியாக கருதப்படும் மகாதீர் எதிர்க்கொள்ளும் அதே பிரச்சனையைதான் எனது அரசாங்கமும் எதிர்கொள்கிறது'' என பதிவிட்டுள்ளார்.
முந்தைய அரசு, தங்களது நலனுக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக தனது வலைப்பூவில் தெரிவித்துள்ள மகாதீர், நாட்டை திவாளாக்கும் நிலைக்கு முந்தைய அரசு தள்ளியது என்றும் தெரிவித்துள்ளார்.
"பலர் ஊழல் பணத்தையும், சட்டவிரோத உதவிகளையும் அனுபவித்து மகிழ்வர். அவர்கள் இம்மாதிரியான தவறான நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் நினைப்பர், ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு நாட்டின் மோசமான நிலை தெரியும் எனவே ஊழல் அரசாங்கத்தை அவர்கள் தூக்கி எறிந்துவிட்டனர்."
"ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்தாலும் தற்போது அரசியல் ரீதியாக நாடு ஸ்திரமாக உள்ளது,"
"மலேசிய பொருளாதாரம் மற்றும் அதன் ரூபாய் மதிப்பு வலுவாக உள்ளது. அரசாங்கத்துக்கு அதன் நிதி மற்றும் பொருளாதார கொள்கைகள் மீது நம்பிக்கை உள்ளது. அதேபோல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை உள்ளது என்று அவர் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment