பல உயிர்களை பறிக்கக்கூடிய புதிய வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.
சீனாவில் சந்திர புத்தாண்டுக்கான பொது விடுமுறை நாளில் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய ஷி ஜின்பிங், "இந்த நாடு கடுமையான சூழலை சந்தித்து வருவதாக" மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
சீன நகரமான வுஹானில் பரவத் தொடங்கிய புதிய வைரஸால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உண்மையில் சீனாவால் இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாது என பிரிட்டன் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
`யாரும் வெளியே போக கூடாது` - கடும் கட்டுப்பாடில் சீன நகரங்கள்
புதிய மருத்துவமனை கட்டும் சீனா
1,000 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை ஒன்று ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், இரண்டாவதாக மற்றுமொரு அவசர நிலை மருத்துவமனை இரண்டே வாரங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளதாக அரசு செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவமனையில் 1,300 நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள்.
இந்நிலையில், வுஹான் நகரத்தை கொண்ட ஹூபே மாகாணத்திற்கு சிறப்பு ராணுவ மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கலையிழந்த சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள்
நேற்று (ஜனவரி 25) சீனப் புத்தாண்டு. 5 பௌர்ணமிகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்தப் புத்தாண்டுக்கு குறிப்பிட்ட எந்தத் தேதியும் கிடையாது. ஒவ்வோரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் இது அழைக்கப்படும். இந்த ஆண்டுக்கு 'எலி ஆண்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால், ஹூபே மாகாணத்தில் பலர் இந்த புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இருக்கவில்லை.
போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதுடன் வுஹானில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சீனாவின் பல இடங்களில் பயணிகளுக்கு ஆங்காங்கே பரிசோதனை செய்யப்பட்டது.
ஹாங்காங்கில் அதிகபட்ச அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பள்ளி விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனாவைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்?
மனிதர்கள் இதுவரை கண்டிராத இந்த வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.
Virus என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? | All you need to know about Virus |
2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.
இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.
சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பா வரை
சீனாவில் மட்டும் 1,372 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இது பல நாடுகளுக்கும் பரவி இருக்கிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 4 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதே சமயத்தில் ஐரோப்பாவிற்கும் இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 3 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவில் தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தைவான், மலேசியா, வியட்நாம், தென் கொரியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியிருக்கிறது.
அமெரிக்காவிலும் இரண்டு பேர் இதனால் பாதிக்கப்பட்டள்ளனர்.
Post a Comment
Post a Comment