ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்தன.
இன்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது.
இரண்டாவதாக விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த போட்டியின் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 128 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 29வது சதம்.
ஆடம் ஜம்பா பந்துவீச்சில் ஸ்டார்ட்க்கிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
கேப்டன் விராட் கோலியும் சிறப்பாக விளையாடி 91 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் முறையே 3, 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், அதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
மூன்றாவது ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், ஏழாவது விக்கெட் வரை நிலைத்து நின்று விளையாடி, 132 பந்துகளில் 131 ரன்களை அடித்த நிலையில், முகமத் ஷமியின் பந்துவீச்சில் அவுட்டானார்.
ஸ்டீவ் ஸ்மித்தை தவிர்த்து மார்னஸ் (54), அலெக்ஸ் காரே (35) உள்ளிட்டோர் நடுத்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் 11, 4, 0, 1, 1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, முகமத் ஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் மற்றும் நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்றாலும் கூட, அவர் தான் வீசிய 10 ஓவர்களில் மொத்தமாக வெறும் 38 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
Post a Comment
Post a Comment