பாதை மண்சரிவினால் பாதிப்பு




(க.கிஷாந்தன்)

பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  கோணகல தோட்டம் 10 ஆம் கட்டை கீழ் பிரிவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த பாதையை பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் இப்பகுதியில் 70  குடும்பங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்த போதும் கடந்த நாட்களில் நிலவிய கடும் மழை காரணமாக இந்த பாதை பாரிய மண்சரிவு மற்றும் கற்பாறைகள்  சரிந்து விழ்துள்ளது. இதனால் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களும் அதிக அளவிலான பயணிகள் தோட்ட தொழிலாளர்கள் என பலரும் பாரிய சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள்  பாடசாலைக்கு செல்வதாயின் இந்த பாதையை பயன்படுத்தினால் 1 km தூரம் மாத்திரமே நடந்து செல்ல வேண்டும். இல்லை என்றால் சுமார் 4 km தூரம் பஸ்களில் ஊடாக ஒரு நாளைக்கு ஒரு தடவை 12 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும்  இது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை எனவும் கூறினர்.

இந்த பகுதிகளில்  குடியிருப்புகளும் காணப்படுவதினால் பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.