#கொரோனா வைரஸ். ஆறே நாளில் மருத்துவமனை கட்டும் சீனா




கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சீன நகரமான வுஹானில் ஆறு நாட்களில் ஒரு மருத்துவமனையை உருவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சீனாவில் இதுவரை 830 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
11 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட வுஹான் நகரில் இந்த வைரஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்டது. இதனால் அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதிய இடமும், மருந்துகளும் இன்றி மருத்துவமனைகள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், வுஹான் நகரில் 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய மருத்துவமனை ஒன்றை கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 25,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தில் ஏற்கனவே மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கிய காணொளி ஒன்றை சீன ஊடகங்கள் வெளியிட்டன.
இதேபோல சார்ஸ் வைரஸ் பாதிப்புகளை சமாளிக்க, 2003ஆம் ஆண்டு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வெறும் ஏழே நாட்களில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டது.
''குறிப்பாக வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்கவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கவும் இவ்வாறு தனி மருத்துவமனை அமைக்கப்படுகிறது'' என ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் ஜோன் கவுஃப்மேன் தெரிவித்தார்.
சீனாவால் ஆறு நாட்களில் மருத்துவமனை கட்டமுடியுமா?


சீனாவால் ஆறு நாட்களில் மருத்துவமனை கட்டமுடியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption(கோப்புப்படம்)

சீனா ஏற்கனவே குறுகிய காலத்தில் பல நினைவு சின்னங்கள் அமைத்து சாதனை படைத்துள்ளது என வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் மூத்த உறுப்பினர் யான்சோங் ஹுவாங் கூறுகிறார்.
மேலும் 2003ம் ஆண்டு பெய்ஜிங்கில் சார்ஸ் வைரஸ் பாதிப்பின்போது மருத்துவமனை ஒன்று ஏழு நாட்களில் கட்டப்பட்டது என குறிப்பிட்டார். அதேபோல வுஹானில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை முன்பே கட்டப்பட்ட கட்டுமானம் கொண்டு உருவாக்கப்படவுள்ளது.
இவ்வாறு மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான உரிமங்களையும், நிதி தேவைகளையும் சீன அரசாங்கம் சமாளித்துவிடும் என கூறப்படுகிறது. சரியான நேரத்தில் மருத்துவமனை கட்டுமான பணிகளை முடிப்பதற்காக கட்டுமான பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் சீனா முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர் என ஹுவாங் தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகள் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கட்டிடங்களை சீன நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்க முடியும் என யான்சோங் ஹுவாங் கூறுகிறார்.
வுஹானின் மருந்து தேவைகளை சமாளிக்க மற்ற மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளை வரவழைக்க முடியும் அல்லது மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்தே மருந்துகளை வரவழைக்க வேண்டி இருக்கும்.


சீனாவால் ஆறு நாட்களில் மருத்துவமனை கட்டமுடியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சார்ஸ் வைரஸ் பாதிப்பிலிருந்து சீனா எப்படி மீண்டு வந்தது?

2003ஆம் ஆண்டு சீனாவில் சார்ஸ் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கட்டப்பட்ட மருத்துவமனை, உலகிலேயே மிகவும் விரைவாக கட்டப்பட்ட மருத்துவமனை என்ற சாதனையை படைத்தது. இரவு - பகல் பாராமல் சுமார் 4,000 ஊழியர்கள் இந்த மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, சி.டி ஸ்கேன் செய்யும் வசதி மற்றும் அனைத்து வார்டுகளுக்கும் தனியாக கழிவறை வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தது.
சார்ஸ் பாதிப்பின்போது அரசாங்க ஊழியர்களின் ஊதியத் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நோயாளிகளின் சிகிச்சைக்காக செலவிடப்பட்டது. ஆனால் தற்போது அந்த அவசியம் ஏற்படவில்லை.