பிரபல அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரரான கோபி பிரயண்ட் தனது மகள் ஜனாவுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிக் கோபி பிரயண்ட் மற்றும் அவரது மகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
41 வயதான பிரயண்ட், கலிஃபோர்னியாவில் ஒரு தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் ஷெரிஃப் கூறினார்.
தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பிரயண்ட் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். கூடைப்பந்து விளையாட்டு வரலாற்றில் பிரயண்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
பிரயண்ட் உயிரிழப்புக்குப் பல விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அமெரிக்காவில் நடந்த கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளின்போது சில நிமிடங்கள் மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
லாஸ் ஏன்ஜன்ஸ் நகரில் நடந்த கிராமி விருதுகள் நிகழ்விலும் பிரயண்டிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசிய கூடைப்பந்து சங்கம் வெளியிட்டுள்ள, அறிக்கையில் ''13 வயதான ஜனா மற்றும் கோபி பிரயண்டின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்து உள்ளது. இது பேரிழப்பு'' என்று குறிப்பிட்டிருந்தனர்.
எப்படி விபத்து ஏற்பட்டது ?
ஹெலிகாப்டரில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்ததை லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் ஷெரிஃப் உறுதிப்படுத்தினார். இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் வசித்த மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார்.
- பத்ம விபூஷண் விருது பெறும் மெக்னிஃபிசெண்ட் மேரி கோம் - 10 தகவல்கள்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் களத்தில் தமிழகத்தில் தயாரான ஆடைகள்
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் வசிக்கும் கவின் மாசாக் சிபிஎஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், ''பெரும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை வைத்தே நடந்தது விபத்து என்பது உறுதியாக தெரிந்தது. உடனே வெளியில் வந்து பார்த்தபோது மலைப்பகுதியில் பெரும் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது.'' என்று கூறினார்.
இந்த விபத்து ஏற்பட்டதன் காரணத்தை விசாரிக்க அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு துறை ஒரு குழுவை நியமித்துள்ளது.
பிரயண்ட் கடந்து வந்த பாதை?
பிரயண்ட் தனது 20 வருட விளையாட்டு பணியை லாஸ் ஏஞ்சல்ஸில் கழித்தார். கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். 2008ம் ஆண்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
2015ம் ஆண்டு அவர் எழுதிய லவ் லெட்டர் டு ஸ்போர்ட் என்ற 5 நிமிட திரைப்பட கதைக்காக 2018 ம் ஆண்டு ஆஸ்கர் விருதும் பெற்றார். பிரயண்ட் மற்றும் வனிசா தம்பதியருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
2003ம் ஆண்டு 19 வயது பெண் பிரயண்ட் மீது பாலியல் புகார் அளித்தார். அப்போது இருவரும் ஒப்புதலோடு தான் உடலுறவு வைத்துக்கொண்டோம் எனக் கூறி தன் மீதான புகாரை ஏற்க மறுத்தார். பிறகு ''நான் இந்த உறவை புரிந்த கொண்ட விதத்தில் அந்த பெண் புரிந்துகொள்ளவில்லை'' என்று கூறி புகார் அளித்த பெண்ணிடம் மன்னிப்பும் கோரினார்.
Post a Comment
Post a Comment