குடியுரிமை பறிபோகும் என்ற பயத்தால்




ஜனவரி குளிர் நாள். காலை 10 மணி. நாசிக் மாவட்டத்தில், பழைய கோட்டை எதிரே மாலேகான் மாநகராட்சி சாலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால், கட்டடத்தின் பின்புறம் உள்ள பிறப்பு - இறப்பு பதிவுக்கான பகுதியில் பெரிய வரிசை இருக்கிறது.
அந்தக் கதவை ஒட்டியுள்ள சாலை கூட்டமாக உள்ளது. படிவங்களை பூர்த்தி செய்ய உதவும் ஏஜென்ட்களின் மேசைகளை சுற்றி மக்கள் குவிந்துள்ளனர். கூட்டத்தினர் பதற்றமாக உள்ளனர்.
ஏறத்தாழ அனைத்து விண்ணப்பதாரர்களும் முஸ்லிம்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மாலேகானில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.
நகரின் மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் முஸ்லிம்கள். எனவே நகரில் எங்கே வரிசை இருந்தாலும், அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களாக இருப்பதில் வியப்பு எதுவும் கிடையாது.
இந்த அலுவலகத்திற்கு வெளியே உள்ள கூட்டம் கடந்த நான்கு மாதங்களாக இப்படியே இருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
பிறப்பு ஆவணங்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மாலேகான் முஸ்லிம்கள்படத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, மாலேகான் மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் கேட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு பற்றிய விவாதங்களால் அச்சமடைந்து முஸ்லிம் சமுதாயத்தினர் பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் 11ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 20ஆம் தேதி அந்தச் சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துவிட்டது.
ஆனால் அதுகுறித்த விவாதங்கள் அதற்கு முன்பே தொடங்கிவிட்டன. இது முஸ்லிம்களுக்கு விரோதமான சட்டம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. பாஜக அதை மறுத்து பிரசாரம் செய்கிறது.
அசாமில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியாக, தேசியக் குடிமக்கள் பதிவேடு பற்றி விவாதம் நாடு முழுக்க பரவியுள்ளது. இந்தப் பின்னணியில் மாலேகான் மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் கேட்டு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
"கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, சுமார் நான்கு மாதங்களில் வரிசையின் நீளம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த காலக்கட்டத்தில் நாங்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றிருக்கிறோம். வழக்கமாக இப்படி இருக்காது. ஆனால், கடந்த நான்கு மாதங்களில்தான் இப்படி காண்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றிய விவாதம்தான் இதற்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம்,'' என்று மாலேகான் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
பிறப்பு ஆவணங்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மாலேகான் முஸ்லிம்கள்படத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC
Image captionநாளைக்கே என்.ஆர்.சி. அமலுக்கு வந்தால் என்னாவது? என்கிறார் ரெஹனபீ முன்சாப் கான்.
தங்களுடைய பிறப்புச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று இங்குள்ள முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.
தங்களுடைய சான்றிதழ்கள் மட்டுமின்றி, முந்தைய தலைமுறையினரின் சான்றிதழ்களையும், பிள்ளைகளின் சான்றிதழ்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி விலகல் சான்றிதழில் பிறப்பு தேதி இருக்கிறது என்பதால், அந்தச் சான்றிதழையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
பிறப்புச் சான்றிதழ்களைப் பெறவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய பிறப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய மாநகராட்சியில் முதலில் அவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.
பதிவு எதுவும் செய்யப்படாவிட்டால், நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதுகுறித்து பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டு, அதில் யாருக்காவது ஆட்சேபம் ஏதாவது இருக்கிறதா என கேட்க வேண்டும்.
அந்த நடைமுறைக்குப் பிறகு, புதிய பிறப்புச் சான்றிதழ் கேட்டு அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்தச் சான்றிதழ்களையும் காட்ட வேண்டியிருக்கும் என்பதால், இந்த நடைமுறைகளை பலரும் இப்போதே தொடங்கிவிட்டனர்.
வரிசையில் காத்திருக்கும் ரெஹனபீ முன்சாப் கான் என்பவரை நாம் சந்தித்தோம். அந்தப் பெண்மணி மாலேகானில் காந்தி நகர் காலனியில் வசிக்கிறார். இவர் தினக்கூலித் தொழிலாளியாக இருக்கிறார்.
தனக்கும், தன் மாமனாருக்கும் பிறப்புச் சான்றிதழுக்காக அவர் விண்ணப்பித்திருக்கிறார். பல ஆண்டுகளாக அவருக்கு இவை தேவைப்படவில்லை என்றால், இப்போது எதற்காக விண்ணப்பிக்க வேண்டும்? ``தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக (என்.ஆர்.சி.) இதைப் பெற விண்ணப்பிக்கிறோம். இதைப் பெற்றுக் கொள்ளுமாறு மற்றவர்கள் கூறுகிறார்கள்.
பிறப்பு ஆவணங்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மாலேகான் முஸ்லிம்கள்படத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC
Image captionவிண்ணப்பங்கள் எழுத உதவும் ஏஜெண்டு.
அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம். மற்றவர்கள் செய்வதை நாங்களும் செய்கிறோம். என்.ஆர்.சி. வராவிட்டால் நாங்கள் இங்கு வந்திருக்க வேண்டியதில்லை, நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியதில்லை'' என்று அவர் கூறினார்.
''ஆனால் என்.ஆர்.சி. பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அரசு கூறுகிறது. அப்படி இருக்கும்போது இந்தச் சான்றிதழ்களுக்காக ஏன் நீங்கள் இப்படி அலைகிறீர்கள்,'' என்று நாங்கள் கேட்டோம்.
''அரசு அப்படி கூறினால், மக்கள் ஏன் அச்சப்படுகிறார்கள்? நாளைக்கே என்.ஆர்.சி. அமலுக்கு வந்தால் என்னாவது? அது நடக்காது என்று இன்றைக்கு சொல்வார்கள். ஆனால், நாளைக்கு அமல் செய்தால் என்னாகும்? அப்போது நீங்கள் என்ன சொல்ல முடியும்,'' என்று ரெஹனபீ அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார்.
அன்வர் உசேன் இங்கு 15 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார். சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய உதவி வருகிறார். ''என்.ஆர்.சி. பற்றி மக்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் டி.வி. பார்க்கிறார்கள். வாட்ஸப் தகவல்களைப் பார்க்கிறார்கள். பிரதமர் மற்றும் அமித்ஷாவின் பேச்சுகள் மாறிக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறார்கள். செய்திகளைப் பார்த்து பதற்றமடைந்து அவர்கள் இங்கே வருகிறார்கள்.''
''இவ்வளவு காலத்தில், இவ்வளவு கூட்டத்தை நான் பார்த்தது கிடையாது. கடந்த மூன்று - நான்கு மாதங்களாக மக்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு வருகிறார்கள்'' என்று அன்வர் உசேன் கூறினார்.
பலரும் செய்திகளைப் பார்க்கிறார்கள், பத்திரிகைகள் படிக்கிறார்கள், வாட்ஸப் தகவல்களைப் பார்க்கிறார்கள். இந்த விஷயம் குறித்து விவாதங்களைக் கேட்கிறார்கள். அது குழப்பத்தை அதிகரித்துள்ளது. எதிர்காலம் பற்றி நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால் அவற்றுக்குப் பதில் கிடைக்கவில்லை. இதுதான் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
பிறப்பு ஆவணங்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மாலேகான் முஸ்லிம்கள்படத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC
Image captionவிண்ணப்பங்கள் எழுத உதவும் ஏஜெண்டு.
குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசியக் குடிமக்கள் பதிவேடும் நாடு முழுக்க எதிர்ப்பை சம்பாதித்துள்ளன. சில மாநிலங்களில் தீவிர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும், இப்போதைய இந்திய குடிமக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. குடியுரிமை கோரி புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்குத்தான் அந்த சட்ட திருத்தம் பொருந்தும் என்றும் கூறுகிறது.
தேசியக் குடிமக்கள் பதிவேடு பற்றி அமைச்சரவை எந்த ஆலோசனையும் செய்யவில்லை என்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். ஆனால், நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுக்க அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
எனவே இந்த விஷயத்தில் குழப்பம் உள்ளது. தங்கள் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது என மக்கள் அச்சப்படுகின்றனர். மக்கள் மனதில் உள்ள இந்தக் குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
தங்கள் பெயர்களில் திருத்தம் செய்ய சிலர் விண்ணப்பிக்கிறார்கள். ஆவணங்களில் உள்ள பெயர்களில் மாற்றம் இருந்து தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுவிட்டால், எல்லா இடங்களிலும் அது தொடரும் என்று முன்னாள் கவுன்சிலர் ஷகில் அகமது ஜானி பெய்க் கூறுகிறார்.
பிறப்பு ஆவணங்களுக்காக வரிசையில் காத்திருக்கும் மாலேகான் முஸ்லிம்கள்படத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC
``பல தலைமுறைகளாக நாங்கள் இங்கே வாழ்கிறோம். ஆனால் அசாம் பற்றிய செய்தி வந்ததில் இருந்து மக்கள் பதற்றமாக உள்ளனர். பெயரில் சிறிய தவறு இருந்தாலும் அவருடைய பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவதாக செய்திகளில் நாங்கள் பார்த்தோம்.
அதுபோன்ற பிரச்சனை தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க விரும்புகிறார்கள். அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து, தவறு ஏதும் இருந்தால் திருத்தி வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்'' என்கிறார் ஷகில் அகமது.
ஜவுளி தொழில் மையமாக மாலேகான் இருக்கிறது. கைத்தறிகளும், ஜவுளி ஆலைகளும் நிறைய உள்ளன. பல முஸ்லிம் குடும்பத்தினர், பல தலைமுறைகளாக அங்கு வாழ்கின்றனர். பல தொழிலாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் வட மாநிலங்களில் இருந்து வந்து குடியேறியுள்ளனர். இந்தப் பிரச்சனையால் அவர்களும் அச்சம் அடைந்துள்ளனர். அதுபற்றி பேச முன்வர யாரும் தயாராக இல்லை.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாலேகானில் பெரிய பேரணிகள் நடந்தன. பெண்கள் மட்டுமே பங்கேற்ற ஒரு பேரணியும் நடந்தது. 1969ல் மாலேகானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் முன்னோர்களின் சான்றிதழ்களை இழந்துவிட்டதாகப் பலரும் கூறுகின்றனர்.
அரசியல் மற்றும் சமூக ரீதியாக முக்கிய இடமாக மாலேகான் உள்ளது. கலவரங்கள், குண்டு வெடிப்புகளுக்காக அது எப்போதும் செய்திகளில் இடம் பெற்றுக் கொண்டே இருக்கும்.
ஆனால், தங்கள் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற நிலை, சரியான தகவல் கிடைக்காத குழப்பம் ஆகிய காரணங்களால் சமீப காலமாக அந்த மக்கள் வரிசைகளில் காத்திருக்கிறார்கள். இந்த நிச்சயமற்ற நிலை விலகினால் தவிர, வரிசையின் நீளம் குறையப் போவதில்லை.